உ.பி.யில் மத நிகழ்ச்சியில் மேடை சரிந்து 6 பேர் உயிரிழப்பு: நடந்தது என்ன?

உ.பி.யில் மத நிகழ்ச்சியில் மேடை சரிந்து 6 பேர் உயிரிழப்பு: நடந்தது என்ன?
Updated on
1 min read

உ.பி.யில் சமண மத நிகழ்ச்சி ஒன்றில் மூங்கில் மேடை இடிந்து விழுந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

உ.பி.யின் பக்பத் மாவட்டம் பராத் பகுதியில் உள்ள ஜெயின் சமூகத்தினர் நேற்று ஒரு கோயிலில் லட்டு திருவிழா நடத்தினர்.

இவ்விழாவில் தற்காலிக மூங்கில் மேடை ஒன்றில் லட்டு விநியோகம் செய்யப்பட்டது. அப்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் மேடையில் ஏறியதால் எடை தாங்காமல் மேடை இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

பக்பத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர்பித் விஜய்வர்கியா கூறுகையில், “சம்பவத்தை தொடர்ந்து போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் அங்கு விரைந்தன. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். லேசான காயம் அடைந்த சுமார் 20 பேர் முதலுதவிக்கு பிறகு வீடு திரும்பினர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்றார்.

உள்ளூர் ஜெயின் சமூகத்தினர் கடந்த 30 ஆண்டுகளாக இத்திருவிழாவை நடத்தி வருவதாக மாவட்ட ஆட்சியர் அஸ்மிதா லால் கூறினார்.

ராகேஷ் ஜெயின் என்ற பக்தர் கூறுகையில், “பகவான் ஆதிநாதர் மோட்சம் அடைந்ததை குறிக்கும் வகையில் ஆண்டுதோறும் இவ்விழாவை நடத்துகிறோம். இவ்விழாவில் ஒவ்வொரு ஆண்டும் மூங்கில் மேடை அமைக்கிறோம். முதல் முறையாக விபத்து நிகழ்ந்துள்ளது" என்றார்.

இந்த சம்பவம் குறித்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் வேதனை தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in