டெல்லி தேர்தல்: ஆம் ஆத்மிக்காக அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி எம்.பி.,க்கள் பிரச்சாரம்

அரவிந்த் கேஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் | கோப்புப்படம்
அரவிந்த் கேஜ்ரிவால், அகிலேஷ் யாதவ் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ள டெல்லி பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சிக்காக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அக்கட்சியின் எம்.பி.க்கள் பிரச்சாரம் செய்வார்கள் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

டெல்லியின் ரிதாலாவில் ஜன.30-ம் தேதி நடைபெற இருக்கும் பேரணியில் கேஜ்ரிவாலுடன் இணைந்து அகிலேஷ் யாதவ் பிரச்சாரம் செய்வார். மேலும் இக்ரா ஹசன் உள்ளிட்ட சமாஜ்வாதி கட்சி எம்.பி.,க்களும் ஆம் ஆத்மிக்காக பிரச்சாரம் மேற்கொள்வார்கள் என்றும் ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி பேரவைக்கு அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய இண்டியா கூட்டணியின், சமாஜ்வாதி கட்சி டெல்லியில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளை எதிர்த்து ஆம் ஆத்மிக்காக பிரச்சாரம் செய்ய இருக்கிறது. இது கடந்த மக்களவைத் தேர்தலின் போது பாஜகவை ஒன்றிணைந்து எதிர்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட இண்டியா கூட்டணிக்குள் காங்கிரஸ் கட்சியைத் தனிமைப்படுத்தும் யூகத்தை எதிரொலிப்பதாக உள்ளது.

இண்டியா கூட்டணிக்கு தற்போது தலைமை வகிக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பதிலாக, திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமை தாங்கலாம் என்ற பேச்சு எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்குள் கடந்த ஆண்டு எழுந்தது.

இந்நிலையில், மம்தா பானர்ஜிக்கு தனது வெளிப்படையான ஆதரவினைத் தெரிவிக்காமல், இந்த விஷயத்தில் இண்டியா கூட்டணித் தலைவர்கள் விவாதித்து பின்பு முடிவெடுப்பார்கள் என்று தெரிவித்திருந்தார். சமாஜ்வாதி கட்சியைப் போல, திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. சத்ருகன் சின்ஹா பிப்ரவரி 1 மற்றும் 2-ம் தேதிகளில் ஆம் ஆத்மி கட்சியினரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலில், டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 4, காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிட்டன. என்றாலும் பேரவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in