

லக்னோ: மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் தருவோம் என ஆசை காட்டி அழைத்துச் சென்று ரஷ்யாவில் போர்க்களத்துக்கு அனுப்பிவிட்டனர் என்று அங்கிருந்து திரும்பிய இளைஞர்கள் கண்ணீருடன் பேட்டியளித்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் ஆசம்கர் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் (29). இவரது நண்பர் பிரஜேஷ் யாதவ், மாவ் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் இருவரும் ஆசம்கர், மாவ் பகுதியில் வீடுகளுக்கு பெயிண்ட் அடிக்கும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் ரஷ்யாவில் வேலை, கை நிறையச் சம்பளம் என அவர்களுக்கு வாய்ப்பு வந்தது.
இதை நம்பி இருவரும் ரஷ்யாவுக்குச் சென்றனர். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மேலும் சிலர், இந்திய ஏஜெண்டுகளால் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால், அங்கு சென்றதும் அவர்களுக்கு ராணுவப் பயிற்சி அளித்து, உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபடுமாறு களத்துக்கு அனுப்பி வைத்த துயரம் நடந்தேறியுள்ளது. அங்கிருந்து குண்டடி பட்டு உயிர் தப்பி அவர்கள் உ.பி.க்கு திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து ராகேஷ் கூறியதாவது: எங்களுக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம், செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை என்று ஆசை காட்டி ஏஜெண்டுகள் அழைத்துச் சென்றனர். ஆனால் நாங்கள் ரஷ்யாவில் இறங்கியதும், எங்களுக்கு உடல்தகுதிச் சோதனை நடத்தி, பெயர் தெரியாத இடத்துக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு எங்களுக்கு 15 நாட்கள் நவீன ஆயுதங்களை கையாள பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் எங்களை ராணுவ வாகனங்களில் ஏற்றி எல்லைப் பகுதிக்கு அழைத்துச் சென்று உக்ரைன் படையினரை எதிர்த்து சண்டையிடுமாறு உத்தரவிட்டனர். மறுத்தால் எங்களுக்கு தண்டனை அளிக்கப்பட்டது.
உக்ரைன் ராணுவத்துடன் நடந்த போரில் எங்களுக்கு குண்டு பட்டு காயம் ஏற்பட்டது. இதனால் பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். பிரதமர் மோடியின் உத்தரவின் பேரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் எடுத்த நடவடிக்கையால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா திரும்பினோம்.
ரஷ்யாவுடன் தொடர்புள்ள 3 இந்திய ஏஜெண்டுகள்தான் எங்களை அனுப்பிவைத்தனர். கடந்த ஆண்டு ஜனவரி 17-ம் தேதி ரஷ்யாவுக்கு சென்றோம். ஏஜெண்டுகள் சுமித், துஷ்யந்த் ஆகியோர் ரஷ்யாவிலுள்ள ஏஜெண்டுடன் தொடர்புகொண்டு எங்களுக்கு வங்கி கணக்கு தொடங்கினர். பின்னர் எங்கள் கணக்கில் தலா ரூ.7 லட்சம் வரவு வைக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்களைப் பார்க்கவில்லை. ராணுவத்தில் இணைக்கப்பட்டோம். அங்குள்ள ரஷ்ய ராணுவ வீரர்களிடம் பேசியபோதுதான், நாங்கள் ரஷ்ய ராணுவத்துக்கு விற்கப்பட்டோம் என்பதே தெரிந்தது. இவ்வாறு ராகேஷ் கூறினார்.
பிரஜேஷ் கூறும்போது, “மாவ் பகுதியிலிருந்து நான், ராகேஷ் உட்பட மொத்தம் 6 பேர் அங்கு சென்றோம். குண்டு பட்டு காயமடைந்தால் மாதக்கணக்கில் அங்கு சிகிச்சை பெற்றோம். இதில் எங்கள் பகுதியைச் சேர்ந்த கன்ஹையா என்பவர் குண்டு பட்டு உயிரிழந்தார். கண்ணீருடன் நாங்கள் அங்கு காலம் கழித்தோம். ஊர் திரும்புவோமா என்பதே சந்தேகமாக இருந்தது. மத்திய அரசின் முயற்சியால் நாங்கள் உயிர்பிழைத்தோம்” என்றார்.