உத்தராகண்ட் வழியில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்த குடியரசு துணைத் தலைவர் விருப்பம்

உத்தராகண்ட் வழியில் நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்த குடியரசு துணைத் தலைவர் விருப்பம்
Updated on
1 min read

புதுடெல்லி: உத்தராகண்ட் மாநிலம் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியிருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர், இன்றைய நாள் புனிதமானது என்று கூறியுள்ளார்.

மாநிலங்களவை உள்ளகப் பயிற்சித் திட்டத்தின் ஐந்தாவது தொகுதி பங்கேற்பாளர்களுக்கான தொடக்க நிகழ்ச்சிக்கு குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தலைமை தாங்கினார். குடியரசு துணைத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற உள்ளகப் பயிற்சித் திட்டத்துக்கான இணைய தளத்தையும் அவர் தொடங்கி வைத்தார் அப்போது அவர் பேசும்போது, "இன்று ஒரு நல்ல அறிகுறி ஏற்பட்டுள்ளது. இது மங்களகரமான அடையாளம். அரசியலமைப்பு சட்டத்தை இயற்றியவர்கள் அரசியலமைப்பில், குறிப்பாக பகுதி 4-ல் அரசு கொள்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பாக வழிகாட்டியுள்ளனர். இந்த நெறிமுறைக் கோட்பாடுகளை அடைய அரசு கடுமையாக உழைக்க வேண்டும்.

இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 44, நாடு முழுவதும் குடிமக்களைப் பாதுகாக்க ஒரே மாதிரியான பொது சிவில் சட்டத்தை கொண்டு வர வகை செய்கிறது. நாம் அனைவரும் இன்று மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கிறோம். தேவபூமி உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தியுள்ளதற்காக அந்த அரசின் தொலைநோக்குப் பார்வையைத் நான் பாராட்டுகிறேன். நாடு முழுவதும் இந்த சட்டத்தை ஏற்றுக்கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று நம்புகிறேன்.

சட்டவிரோதமாக குடியேறியவர்களால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. இவ்வாறு குடியேறிய லட்சக்கணக்கானவர்கள் தேசத்துக்கு சவாலாக உள்ளனர். அவர்கள் நமது மக்களுக்கான வேலைவாய்ப்புகளைப் பெறுகின்றனர் என்பதால், அரசில் உள்ள ஒவ்வொருவரும் இது குறித்து தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்" என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in