

புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரில் 5-ல் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் நேர்மையற்ற தலைவர்கள் என்ற சுவரொட்டியை ஆம் ஆத்மி கட்சி நேற்று வெளியிட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருடன் ராகுல் காந்தி பெயரும் இடம்பெற்றுள்ளது.
"நேர்மையற்ற மக்கள் அனைவரையும் விட கேஜ்ரிவாலின் நேர்மை மேலோங்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இண்டியா கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே ஏற்கெனவே மோதல் நிலவி வரும் நிலையில் இது மோதலை மேலும் அதிகரித்துள்ளது.
கல்காஜி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அல்கா லம்பா கூறுகையில், “அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தைரியம் இருந்தால், அவர் இண்டியாக கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி 100 எம்.பி.க்களுடன் வலுவாக நிற்கிறது. மக்களவைத் தேர்தலின்போது கூட்டணிக்காக எங்களிடம் கேஜ்ரிவால் கெஞ்சினார். டெல்லியின் 7 இடங்களுக்கு இவர்களுடன் கூட்டணி அமைத்து மிகப்பெரிய தவறை காங்கிரஸ் செய்தது. இதனால் மிகப்பெரிய இழப்பை கட்சி சந்திக்க நேர்ந்தது” என்றார்.