

மும்பை: நடிகர் சயீப் அலிகான் வீட்டில் பதிவான விரல் ரேகையுடன் கைதான ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத்தின் விரல் ரேகை ஒத்துப் போகவில்லை. இதனால் நடிகர் மீதான தாக்குதல் வழக்கில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
கடந்த 15-ம் தேதி மும்பையில் உள்ள நடிகர் சயீப் அலிகான் வீட்டில் மர்ம நபர் புகுந்தார். திருடும் நோக்கத்தில் வீட்டுக்குள் புகுந்த அந்த நபர் நடிகர் சயீபை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
இந்த தாக்குதல் தொடர்பாக வங்கதேசத்தை சேர்ந்த ஷரிபுல் இஸ்லாம் ஷெசாத் (30) கடந்த 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். குழாய் வழியாக 12-வது மாடிக்கு ஏறி சயீப் அலிகான் வீட்டின் கழிவறை ஜன்னலை உடைத்து அவரது வீட்டுக்குள் ஷெசாத் புகுந்ததாக மும்பை போலீஸார் தெரிவித்தனர். குழாயில் பதிவான விரல் ரேகை, ஷெசாத்தின் விரல் ரேகை ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது. ஆனால் இரண்டு விரல் ரேகைகளும் ஒத்துப் போகவில்லை. இதனால் வழக்கில் தொடர்ந்து குழப்பம் நீடிக்கிறது.
சயீப் அலிகான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு சிசிடிவி கேமராவில் பதிவான மர்ம நபரின் முகத்துக்கும் கைதான ஷெசாத்தின் முகத்துக்கும் வேறுபாடுகள் உள்ளன என்று தனியார் ஆய்வகங்கள் ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டன. இதை உறுதி செய்யும் வகையில் விரல் ரேகையிலும் வேறுபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மும்பை போலீஸ் வட்டாரங்கள் கூறும்போது, “ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சயீப் அலிகான் வீட்டில் திருட்டு முயற்சியில் ஈடுபட்டிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம். தாக்குதலில் காயமடைந்த சயீபின் ரத்த தோய்ந்த ஆடைகளை ஆய்வகத்துக்கு அனுப்பி உள்ளோம். கைதான ஷெசாத்தின் ரத்த மாதிரியும் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இதில் ஏதாவது துப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தன.