Published : 23 Aug 2014 09:07 AM
Last Updated : 23 Aug 2014 09:07 AM

10 ஆண்டுகளில் கேரளாவில் பூரண மதுவிலக்கு: முதல்வர் உம்மன் சாண்டி தகவல்

அடுத்த பத்து ஆண்டுகளில் கேரளாவில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்; அதன் முதல் கட்டமாக மாநிலம் முழுவதும் செயல்பட்ட 700 மது பார்கள் மூடப்படுகின்றன என்று முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:

கேரளாவில் ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்கு குறைவான ஓட்டல் களில் செயல்பட்ட 700 மது பார்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு முறைப்படி ஒப்புதல் அளிக்கப்படும்.

இதன்படி மாநிலம் முழுவதும் ஏற்கனவே மூடப்பட்ட 418 மது பார்கள் மீண்டும் திறக்கப்படாது. மீதமுள்ள 312 பார்கள் இந்த நிதியாண்டில் மூடப்படும். அதன்பின் ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே மது பார்கள் செயல்படும்.

அடுத்த 10 ஆண்டுகளில் படிப்படியாக அனைத்து மது பார்களும் மூடப்பட்டு கேரளாவில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று நம்புகிறேன்.

மது வகைகளின் மீது விதிக்கப்படும் 5 சதவீத செஸ் வரி மூலம் சிறப்பு நிதியம் உருவாக்கப்படும். இந்த நிதியம் மூலம் மதுபார்கள் மூடப்படுவதால் வேலையிழக்கும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கேரளாவில் மூடப்பட்ட 418 மது பார்களை மீண்டும் திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி கேரள மாநில காங்கிரஸ் தலைவர் வி.எம்.சுதீரன் தலைமையில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. அவருக்கு கத்தோலிக்க சபையும் முஸ்லிம் அமைப்புகளும் ஆதரவு அளித்தன. இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஆளும் ஐக்கிய ஜனநாயக முன்னணி தலைவர்கள் திருவனந்தபுரத்தில் கூடி ஆலோசனை நடத்தினர். முதல்வர் உம்மன் சாண்டி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மதுபார்களை மூட முடிவு எடுக்கப்பட்டது.

அரசின் புதிய மதுக் கொள்கை உயர் நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 26-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.

வருவாய் அல்ல; மக்கள் நலனே முக்கியம்

டி.எல்.சஞ்சீவிகுமார்

கேரளாவில் மது பார்கள் மூடப்படுவதால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட பசுமைத் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக ‘தி இந்து’-விடம் கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார்.

‘தி இந்து’-வுக்காக அவரிடம் பேசினோம். அப்போது அவர் கூறியதாவது: “முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். மதுவிலக்கு என்பதை நாங்கள் வருவாய் அடிப்படையில் அணுகவில்லை. மக்களுக்கான அரசு என்பதற்கு சில இலக்கணங்கள் இருக்கின்றன. மக்களுக்கான அரசு என்பது வருவாய் கோணத்தில் மட்டுமே ஒரு விஷயத்தை அணுகாது. அதன் அடிப்படையில் நாங்கள் மதுவிலக்கு என்பதை சமூக அக்கறையின் அடிப்படையில் அணுகுகிறோம். மதுவின் மூலம் கிடைக்கும் வருவாயைவிட மக்களின் ஆரோக்கியமே முக்கியம். மது விற்பனை மூலம் கிடைக்கும் ஏழாயிரம் அல்லது எட்டாயிரம் கோடி ரூபாய் வருவாய் என்பது எங்களுக்கு ஒரு பொருட்டு அல்ல.

இருப்பினும் இதர வகைகளில் மாநிலத் தின் வருவாயைப் பெருக்குவதற்காக பல மாதங்களுக்கு முன்பே திட்டங்கள் தீட்டப்பட்டுவிட்டன. பசுமைத் திட்டங்கள் என்கிற பெயரில் சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத தொழில்கள் மேம்படுத்தப்படும். பழங்குடியினர் உதவியுடன் தற்போது கேரள வனத்துறை நடத்திவரும் கானகச் சுற்றுலாத் திட்டங்கள் அதிகரிக்கப்படும். வெளி நாட்டி னருக்காக வணிக ரீதியாக நட்சத்திர யோகா நிலையங்கள் அமைக்கப்படும். குறிப்பாக ஆயுர்வேத மருத்துவத்தை மேலும் மேம் படுத்துவோம். சமீபத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் நெல்லிக்காட்டு மணா கிராமத்தில் ஐந்து நட்சத்திர தரத்திலான ஆயுர்வேதா கிராமம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அங்கு 20 ஆயுர்வேதா வில்லாக்கள் அமைக் கப்பட்டு உலகத் தரத்திலான சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. இதனை மேலும் 70 கிராமங்களுக்கு விரிவுபடுத்துவோம்.”

இவ்வாறு உம்மன் சாண்டி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x