வளர்ந்த இந்தியா இலக்கை அடைய ஒற்றுமையாக இருங்கள்: மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

வளர்ந்த இந்தியா இலக்கை அடைய ஒற்றுமையாக இருங்கள்: மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

Published on

புதுடெல்லி: வளர்ந்த இந்தியா இலக்கை அடைய மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளையொட்டி அவர் பிறந்த ஒடிசாவின் கட்டாக் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக பங்கேற்றார். அப்போது பிரதமர் பேசியதாவது:

நேதாஜி என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் போஸ் வசதியான வாழ்க்கையை தவிர்த்து நாட்டின் சுதந்திரத்திற்காக போராட விரும்பினார். அவர் ஒருபோதும் சவுகரியமான வாழ்க்கையில் சிக்கிக் கொள்ளவில்லை. அதேபோல் வளர்ந்த

பாரதத்தை உருவாக்க நாம் அனைவரும் சவுகரியமான இடத்திலிருந்து வெளியேற வேண்டும். உலக அளவில் சிறந்தவர்களாக நம்மை நாம் மாற்ற வேண்டும். சிறந்து விளங்குவதுடன் செயல்திறனில் கவனம் செலுத்த வேண்டும். போஸ் நாட்டின் சுயராஜ்ஜியத்தில் ஒருமித்த கவனம் செலுத்தினார். பல்வேறு பின்னணி கொண்ட மக்கள் அதற்காக ஒன்றுபட்டனர். இப்போது நாம் வளர்ந்த இந்தியாவுக்காக ஒன்றுபட வேண்டும்.

நேதாஜியின் வாழ்க்கை மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது. இந்தியாவின் ஒற்றுமைக்காக போஸின் வாழ்க்கையிலிருந்து நாம் உத்வேகம் பெற வேண்டும். நாட்டை பலவீனப்படுத்தி அதன் ஒற்றுமையை குலைக்க விரும்புவோரிடம் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். நவீன உள்கட்டமைப்புகள் கட்டமைக்கப்படுகின்றன. ஆயுதப் படைகளின் வலிமை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளது. உலகளவில் இந்தியா ஒரு வலுவான குரலாக உருவெடுத்துள்ளது, இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அந்தமானில் உள்ள தீவுக்கு நேதாஜி பெயர் சூட்டுவது, டெல்லி இந்தியா கேட் பகுதியில் அவருக்கு சிலை வைப்பது, அவரது பிறந்த நாளை பராக்கிரம தினமாக (வீர நாள்) கொண்டாடுவது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளை பிரதமர் மோடி அறிவித்தார்.

நேதாஜி பிறந்த நாளையொட்டி டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் அவருக்கு புகழஞ்சலி செலுத்தப்பட்டது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசுகையில், “டெல்லியில் கார்பன் உமிழ்வை குறைக்கும் முயற்சிகளில் ஒன்றாக 1200-க்கும் மேற்பட்ட எலக்ட்ரிக் பேருந்துகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. வீடுகளின் கூறையில் சூரிய மின்சக்தி சாதனங்கள் அமைப்பதை அரசு ஊக்குவித்து வருகிறது" என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in