மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சயிப் அலிகான்!

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சயிப் அலிகான்!
Updated on
1 min read

மும்பை: கடந்த வாரம் கத்தியால் குத்தப்பட்டு மும்பை லீலாவதி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நடிகர் சயிப் அலிகான் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அவர், தனது மனைவி நடிகை கரீனா கபூருடன் தனது வீட்டுக்கு புறப்பட்டார்.

கடந்த 16-ம் தேதி மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் சயிப் அலிகான் இருந்தபோது, அதிகாலை நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் அவரை கத்தியால் பலமுறை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். இதையடுத்து சயிப் அலிகான், மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. "அறுவை சிகிச்சைக்குப் பிறகு சயிப் அலிகான் ஆபத்தில் இருந்து மீண்டுள்ளார். அவர் தற்போது குணமடைந்து வருகிறார். மருத்துவர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வருகின்றனர். சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்” என்று சயிப் அலிகான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அவரது உடலில் 6 காயங்கள் இருந்ததாகவும், அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடலில் இருந்து கத்தியின் ஒரு துண்டு அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. 5 நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சயிப் அலிகான், இன்று பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவரை அழைத்துச் செல்ல அவரது மனைவி கரீனா கபூர் மருத்துவமனைக்கு வந்திருந்தார். டிஸ்சார்ஜ் நடைமுறைகள் முடிந்ததை அடுத்து சயிப் அலிகான் தனது மனைவியுடன் தனது வீட்டுக்கு காரில் புறப்பட்டுச் சென்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in