Published : 21 Jan 2025 06:03 AM
Last Updated : 21 Jan 2025 06:03 AM

பெண் மருத்துவர் கொலை குற்றவாளி சஞ்சய் ராய்க்கு சாகும் வரை ஆயுள் தண்டனை: வழக்கின் முழு பின்னணி

பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சாகும் வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. அங்கு இரவு பணியில் இருந்த பெண் மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி காலை சடலமாக மீட்கப்பட்டார். அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. இந்த கொடூர கொலை தொடர்பாக மேற்குவங்க காவல் துறையில் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார்.

பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கோரி மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர் கொல்கத்தாவில் சுமார் 50 நாட்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். இதன்காரணமாக ஆர்.ஜி.கர் மருத்துவமனை தலைவர் சந்தீப் கோஷ் பதவி விலகினார். அவரோடு தொடர்புடையவர்கள் மீதும் ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

பெண் மருத்துவர் கொலை வழக்கை மேற்குவங்க போலீஸார் விசாரித்து வந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி கொல்கத்தா விசாரணை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சஞ்சய் ராய் மட்டுமே குற்றத்தில் ஈடுபட்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 18-ம் தேதி நீதிபதி அனிபர் தாஸ் தீர்ப்பளித்தார். அப்போது சஞ்சய் ராய் குற்றவாளி என்று தீர்ப்பளித்த அவர் தண்டனை விவரம் ஜனவரி 20-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார். இதன்படி கொல்கத்தா விசாரணை நீதிமன்றத்தில் நேற்று தண்டனை விதிப்பது தொடர்பான வாதம் நடைபெற்றது.

குற்றவாளி சஞ்சய் ராய் கூறும்போது, “நான் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடவில்லை. என்னை வழக்கில் சிக்க வைத்துள்ளனர். சிறையில் அடித்து துன்புறுத்தினர். பல்வேறு ஆவணங்களில் என்னிடம் வலுக்கட்டாயமாக கையெழுத்து பெற்றனர்" என்று தெரிவித்தார்.

சிபிஐ தரப்பில் கூறும்போது, “குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்க வேண்டும். இது மற்றவர்களுக்கு பாடமாக அமையும்" என்று தெரிவிக்கப்பட்டது.

பெண் மருத்துவரின் பெற்றோர் தரப்பில் கூறும்போது, “மருத்துவமனையில் பாதுகாவலராக பணியாற்றிய சஞ்சய் ராய் மிகக் கொடூரமான குற்றத்தில் ஈடுபட்டு உள்ளார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்" என்று கோரினர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு நீதிபதி அனிபர் தாஸ் தண்டனை விவரத்தை வெளியிட்டார். நீதிபதி கூறியதாவது:

இது அரிதினும் அரிதான வழக்கு என்பதை சிபிஐ நிரூபிக்கவில்லை. எனவே குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்க முடியாது. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. அவர் சாகும் வரை சிறையில் இருக்க வேண்டும். சஞ்சய் ராய்க்கு ரூ.50,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. பெண் மருத்துவரின் குடும்பத்துக்கு மாநில அரசு சார்பில் ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி அனிபர் தாஸ் உத்தரவிட்டார்.

கதறி அழுத சஞ்சய் ராய்: நீதிபதி தண்டனை விவரத்தை அறிவித்ததும் குற்றவாளி சஞ்சய் ராய் கதறி அழுதார். அவருடைய வழக்கறிஞர் அவருக்கு ஆறுதல் கூறினார்.. உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படவில்லை. ஆயுள் தண்டனை மண்டுமே விதிக்கப்பட்டிருக்கிறது" என்று வழக்கறிஞர் தெரிவித்தார். அப்போது சஞ்சய் ராய் கூறும்போது, “நான் எந்த குற்றமும் செய்யவில்லை. நான் நிரபராதி" என்றார்.

முதல்வர் மம்தா கருத்து: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறும்போது, “குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன். இந்த வழக்கு மாநில காவல் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை. எங்களால் எதுவும் செய்ய இயலவில்லை" என்று தெரிவித்தார்.

இழப்பீட்டை ஏற்க மாட்டோம்: பெண் மருத்துவரின் தந்தை அறிவிப்பு

உயிரிழந்த பெண் மருத்துவரின் தந்தை கூறியதாவது: எங்களுக்கு முழுமையாக நீதி கிடைக்கவில்லை. சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்காமல், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு இருக்கிறது. எனினும் நீதிக்கான அடித்தளத்தை விசாரணை நீதிபதி உருவாக்கி உள்ளார். உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வரை நீதிமன்றத்தில் தொடர்ந்து போராடுவேன்.

எனது மகளின் உயிரிழப்புக்கு மாநில அரசு ரூ.17 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. இந்த இழப்பீட்டை ஒருபோதும் ஏற்க மாட்டோம். இதை நீதிபதியிடம் நேரடியாக கூறிவிட்டோம். இந்த வழக்கு அரிதினும் அரிதான வழக்கு என்பதை நிரூபிக்க சிபிஐ தவறிவிட்டது. இவ்வாறு பெண் மருத்துவரின் தந்தை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x