

பாராகிளைடிங் சாகச விளையாட்டுக்கான விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என சோஹா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஸ்ரீதர் வேம்பு வலியுறுத்தியுள்ளார். நண்பரின் 27 வயது மகன் மரணத்தைத் தொடர்ந்து அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: எனது குடும்பத்துக்கு நெருக்கமான நண்பர்களான சிபி ஆனந்த் மற்றும் பிரியா தம்பதியரின் 27 வயது மகன் ஜெயேஷ் ராம். இவர் கடந்த 17-ம் தேதியன்று இமாச்சல பிரதேசம் குலூவில் பாராகிளைடிங் சாகச விளையாட்டில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி உயிரிழந்தார். நேற்று நடைபெற்ற அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்று திரும்பியது எனக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாராகிளைடிங் செய்வதற்கான விதிமுறைகள் கடுமையாக இல்லாததால் இமாச்சலில் இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடக்கின்றன. இதில், ஜெயேஷ் ராமும் சிக்கி பலியானது மிக வருத்தமான சம்பவம்.
பாராகிளைடிங் சாகச விளையாட்டுக்கான விதிமுறைகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பாதுகாப்பு நடைமுறைகளையும் உரிய வகையில் செயல்படுத்த வேண்டும். இந்த விளையாட்டுக்கு வலுவான ஒழுங்குமுறை மேற்பார்வை தேவைப்படுகிறது.
பொதுவாக குலூ அதிகளவில் விபத்துகள் ஏற்படும் பகுதி. எனவே, இளம் வயதினர் குறிப்பாக, இளைஞர்கள் இதுபோன்ற மோசமான அபாயகரமான விளையாட்டுகளை தவிர்க்க வேண்டும். இவ்வாறு ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.