Last Updated : 29 Jul, 2018 08:50 AM

 

Published : 29 Jul 2018 08:50 AM
Last Updated : 29 Jul 2018 08:50 AM

முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு புதிய அமைப்பு; ஆர்எஸ்எஸ் பாணியில் தற்காப்புக் கலை பயிற்சி

நாடு முழுவதும் முஸ்லிம் சிறுபான்மையினர் பல்வேறு காரணங்களுக்காக தீவிர வலதுசாரி சிந்தனையாளர்களால் தாக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான ஜமாய்த் உலாமா-எ-ஹிந்த் சார்பில் ‘ஜமாத்-எ- இளைஞர் அமைப்பு’ தொடங்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அடுத்த 10 மாத காலத்தில் இந்த அமைப்பில் 10,000 உறுப்பினர்களை சேர்க்க, ஜமாய்த் உலாமா-எ-ஹிந்த் அமைப்பின் தலைவர் மவுலானா மகமூத் மதானி திட்டமிட்டுள்ளார்.

இந்த அமைப்பின் உறுப்பினர் களுக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பினரை போல தற்காப்புக்கலை பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளது.

உலகப் புகழ்பெற்ற மதரஸாவான தாரூல் உலூம் அமைந்துள்ள உ.பி.யின் தியோபந்த் நகரில் உள்ள பிர்தவுஸ் தோட்டப் பகுதியில் புதிய இளைஞர் அமைப்பிற்கான தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் குஜராத், ஹரியாணா மற்றும் உ.பி. மாநிலங்களைச் சேர்ந்த 96 இளைஞர்கள் தங்கள் தற்காப்புக்கலை திறமையை வெளிப்படுத்தினர்.

தற்போது பசு பாதுகாப்பு எனும் பெயரில் முஸ்லிம்கள் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் அதிகமாகி வருகிறது. இதன் மீது மத்திய, மாநில அரசுகளும் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காதது முஸ்லிம்களை கவலை அடையச் செய்துள்ளது. இதனால், முஸ்லிம்கள் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டி இந்தப் புதிய அமைப்பு தொடங்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜமாய்த் உலாமா 1919-ம் ஆண்டில் இந்தியாவில் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் பிரிந்த பிறகு 1948-ல், ஜமாய்த் உலாமா-எ-ஹிந்த் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சன்னி பிரிவு முஸ்லிம்களின் முக்கிய சமூகநல அமைப்பாகக் கருதப்படும் இதில் லட்சக்கணக்கான உறுப்பினர்கள் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x