Published : 19 Jan 2025 06:24 PM
Last Updated : 19 Jan 2025 06:24 PM

பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் 2 சிலிண்டர்கள் வெடித்து தீ விபத்து: 18 கூடாரங்கள் சேதம்

பிரயக்ராஜ்: உத்தரப் பிரதேசம் மாநிலம் பிரயக்ராஜில் நடந்து வரும் மகா கும்பமேளா பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அந்தத் தீ பரவி 18 கூடாரங்கள் சேதமடைந்தன.

இது குறித்து அகரா காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கர் மிஸ்ரா கூறுகையில், “மகா கும்பமேளாவின் செக்டார் 19-ல் இரண்டு எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை” என்றார்.

மகா கும்பமேளா 2025-ன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “மகா கும்பமேளாவில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து மிகவும் வருத்தத்தைத் தருகிறது. கும்பமேளா நிர்வாகம் உடனடியாக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உறுதி செய்தது. அனைவரது பாதுகாப்புக்காகவும் நாங்கள் கங்கை அன்னையை பிரார்த்தனை செய்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து அடர்த்தியான கரும்புகை மேலெழும் வீடியோவையும் பகிர்ந்துள்ளது.

விபத்து குறித்து ஏடிஎம் மேளா, விவேக் சதுக்வேதி கூறுகையில், “துரதிருஷ்டவசமாக கீதை பத்திரிகை முகாமில் இருந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கிறது. 70-80 குடிசைகள், 18 கூடாரங்கள் எரிந்துள்ளதாக தெரிகிறது. உடனடியாக, முகாம்களின் கூடாரங்களில் இருந்தவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். உயிரிழப்புகள் எதுவும் இல்லை. அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். தீ அணைக்கப்பட்டுள்ளது” என்றார்.

யோகியிடம் மோடி விசாரிப்பு: தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக சம்பவ இடத்துக்கு உயர் அதிகாரிகளை அனுப்பி வைத்தார். அதன்பின் சம்பவ இடத்துக்கு அவரே நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இதனிடையே, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை தொலைபேசியில் தொடர்புகொண்டு தீ விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x