Published : 19 Jan 2025 04:43 AM
Last Updated : 19 Jan 2025 04:43 AM

மணமகனுக்கு வயது 64; மணமகளுக்கு 68 - முதியோர் காப்பகத்தில் காதல் திருமணம்

அமராவதி: ஆந்திராவில் உள்ள முதியோர் காப்பகத்தில் நேற்று முன்தினம் காதல் திருமணம் நடைபெற்றது. இதில் மணமகனுக்கு 64 வயது,மணமகளுக்கு 68 வயது ஆகிறது.

ஆந்திராவின் ராஜமுந்திரியில் சுவர்ணாந்திரா முதியோர் இல்லம் செயல்படுகிறது. இங்கு சுமார் 50-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். நாராயணபுரி பகுதியை சேர்ந்த மூர்த்தி (64) என்பவர் 2 ஆண்டுகளாக தங்கி உள்ளார். இவருக்கு கை மற்றும் ஒரு கால் செயலிழந்துவிட்டது.

அதே முதியோர் இல்லத்தில் வசிக்கும் கடப்பா மாவட்டம், கம்முலகுண்டா பகுதியை சேர்ந்த ராமலட்சுமி(68), மூர்த்திக்கு உதவிகளை செய்துவந்தார். குறிப்பாக அவர் சாப்பிடவும், நடக்கவும் உதவி செய்தார். மருத்துவர்கள் எழுதி கொடுத்த மருந்துகளை நேரம் தவறாமல் கொடுத்தார். இதில் மூர்த்தி ஓரளவுக்கு குணமானார்.

வயதான காலத்தில் துணை அவசியம் என்பதை இருவரும் உணர்ந்தனர். இருவரும் திருமணம் செய்து இணைந்து வாழ முடிவு எடுத்தனர். இதுகுறித்து முதியோர் காப்பக நிர்வாகியான ராம்பாபுவிடம் அவர்கள் தகவல் தெரிவித்தனர். இருவருக்கும் நெருங்கிய சொந்தபந்தம் இல்லை என்பதால், முதியோர் இல்லத்திலேயே திருமணம் செய்து வைக்க ராம்பாபு சம்மதம் தெரிவித்தார். அதன்பேரில் கடந்த வெள்ளிக்கிழமை மூர்த்தி, ராமலட்சுமி திருமணம் செய்து கொண்டனர்.

புதுமண தம்பதி கூறும்போது, "வயதானவர்களுக்கு கண்டிப்பாக துணை இருக்க வேண்டும். இதை நாங்கள் உணர்ந்தோம். முதிர்வயதை ஒரு தடையாக நாங்கள் நினைக்கவில்லை. மனம் ஒத்துப் போனது, ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொண்டோம். திருமணம் செய்து கொண்டோம். எங்களின் இறுதி நாட்கள் வரை பிரியாமல் வாழ்வோம்" என்று தெரிவித்தனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x