Published : 18 Jan 2025 04:08 PM
Last Updated : 18 Jan 2025 04:08 PM
சீல்டா: கொல்கத்தா ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என்று சீல்டா மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தண்டனை விவரங்களை ஜன.20ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 25 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது என்றும், கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (ஜன.18) தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோரும் நீதிமன்ற வளாகத்தில் இருந்தனர்.
நீதிபதி அனிர்பன் தாஸ் தனது தீர்ப்பில், சிபிஐ முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட சஞ்சய் ராய் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. பிஎன்எஸ் பிரிவுகள் 64, 66 மற்றும் 103(1) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி. இதற்கு அதிகபட்சமாக மரண தண்டனையும், குறைந்தபட்சமாக ஆயுள் தண்டனையும் இருக்கும் என்று அறிவித்தார்.
அப்போது, “நான் இதைச் செய்யவில்லை. இதைச் செய்தவர்கள், ஏன் கைது செய்யப்படவில்லை?” என்று சஞ்சய் ராய் நீதிமன்றத்தில் கூறினார்.
அக்டோபர் 7, 2024 அன்று இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னர், சீல்டாவில் உள்ள கூடுதல் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தினசரி விசாரணையை நடத்தியது. விசாரணை தொடங்கி 57 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. ஒரே குற்றவாளி சஞ்சய் ராய் என்று சிபிஐ ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT