Published : 18 Jan 2025 09:48 AM
Last Updated : 18 Jan 2025 09:48 AM

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கு: மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பு

சீல்டா: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் மேற்கு வங்கத்தின் சீல்டா மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று (ஜன.18) தீர்ப்பு வழங்குகிறது. இந்த வழக்கில் காவல்துறையில் தன்னார்வலராகப் பணியாற்றிய சஞ்சய் ராய் என்பவரை சிபிஐ கைது செய்து அவர்தான் குற்றவாளி என்று வாதிட்டு வருகிறது. இந்நிலையில், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ கோரிக்கை வைத்துள்ளதாகவும், அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 25 இடங்களில் காயம்ஏற்பட்டுள்ளது என்றும், கழுத்து நெரிக்கப்பட்டதால் மூச்சு திணறி உயிரிழந்துள்ளார் என்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தின் சீல்டா மாவட்ட நீதிமன்றம் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதி அனிர்பன் தாஸ் தீர்ப்பு வழங்குகிறார். விசாரணை தொடங்கி 57 நாட்கள் நிறைவு பெற்ற நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது.

தீர்ப்பு வரவிருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்தப் பேட்டியில், “நல்ல தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் குற்றத்தில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டதை உறுதி செய்துள்ளது. அதனால் நாங்கள் நீதிமன்றங்களை அதையும் கருத்தில் கொள்ள வலியுறுத்தி வருகிறோம். வழக்கின் விசாரணை பாதிதான் முடிந்துள்ளது. எங்களுக்கான நீதி கிடைக்கும் வரை எங்களின் போராட்டம் தொடரும்” என்று கூறியுள்ளார்.

ஆனால், கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் கூட்டு பாலியல் கொடுமைக்கு ஆளாகவில்லை. ஒரே குற்றவாளி சஞ்சய் ராய் என்று சிபிஐ ஆரம்பத்தில் இருந்து கூறி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x