

புதுடெல்லி: அசாம் பார் கவுன்சிலைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜீப் கலிதா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல மனு தாக்கல் செய்தார். அதில் நாடு முழுவதும் உள்ள நீதிமன்ற வளாகங்களில் வழக்கறிஞர்கள், ஊழியர்கள், பொதுமக்களில் ஆண்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு தனித்தனி கழிப்பறைகள் கட்ட உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாய வளாகங்களில் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு தனித்தனி கழிவறைகள் கட்ட வேண்டும். கழிவறைகள் கட்டுவதற்கான நிதியை அனைத்து மாநில அரசுகளும் ஒதுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.