Published : 18 Jan 2025 05:24 AM
Last Updated : 18 Jan 2025 05:24 AM
டெல்லியில் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டு உள்ளது.
வரும் பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் ஏற்கெனவே தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ள நிலையில் பாஜகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியானது.
இதுதொடர்பாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித் தொகை வழங்கப்படும். சமையல் காஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம் அளிக்கப்படும். ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகைகளின்போது ஏழை குடும்பங்களுக்கு இலவசமாக தலா ஒரு சமையல் காஸ் சிலிண்டர் வழங்கப்படும். கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.21,000 உதவித் தொகை வழங்கப்படும்.
70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ரூ.10 லட்சத்துக்கான காப்பீடு வசதி வழங்கப்படும். அடல் கேண்டீன் திட்டத்தின் மூலம் டெல்லி குடிசைவாழ் பகுதிகளில் ரூ.5-க்கு உணவு வழங்கப்படும். 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், கணவரை இழந்த பெண்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படும். 60 வயது முதல் 70 வயது வரையிலான மூத்த குடிமக்களுக்கு ரூ.2,500 ஓய்வூதியம் வழங்கப்படும். டெல்லியில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் திறம்பட அமல்படுத்தப்படும். இதன்மூலம் 51 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வருகிறது. ஆம் ஆத்மியின் மொகில்லா மருத்துவமனை திட்டம் ஊழலின் பிறப்பிடமாக உள்ளது. இந்த திட்டத்தில் ரூ.300 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்று இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் மொகில்லா மருத்துவமனை திட்ட ஊழல் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும். தவறிழைத்த ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி அளிக்கும் அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். இதை மக்கள் நன்கு அறிவார்கள். கடந்த 2019-ம் ஆண்டில் பாஜக சார்பில் 235 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. இதில் 225 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. கடந்த 2020-ம் ஆண்டில் 500 வாக்குறுதிகளை அளித்தோம். இதில் 499 வாக்குதிகளை நிறைவேற்றி உள்ளோம்.
மத்தியில் ஆளும் பாஜக ஆட்சியால் சுமார் 25 கோடி பேர் வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். டெல்லியில் பாஜக ஆட்சி அமைத்தால் மக்கள் நலம், நல்லாட்சி, வளர்ச்சி, பெண்கள் மேம்பாடு, விவசாயிகளின் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துவோம். இவ்வாறு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT