2036-ல் குஜராத்தில் ஒலிம்பிக் போட்டிகள்: பிரதமர் இலக்கு பற்றி அமித் ஷா தகவல்

2036-ல் குஜராத்தில் ஒலிம்பிக் போட்டிகள்: பிரதமர் இலக்கு பற்றி அமித் ஷா தகவல்
Updated on
1 min read

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை குஜராத்தில் நடத்த பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

2036-ம் ஆண்டு ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தும் 'விருப்பக் கடிதத்தை' சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் எதிர்கால போட்டியை நடத்தும் உரிமையை வழங்கும் கமிஷனிடம் இந்தியா கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சமர்ப்பித்தது. இந்நிலையில் 2036-ல் குஜராத்தில் ஒலிம்பிக்கை நடத்த இந்தியா இலக்கு நிர்ணயித்து பயணித்து வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் அகமதாபாத்தில் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது: மெஹ்சானா மாவட்டம் வத்நகரில் மிகப்பெரிய விளையாட்டு வளாகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வரும் 2036-ம் ஆண்டில் குஜராத்தில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார். இதன்மூலம் வத் நகரிலுள்ள இளைஞர் ஒருவர், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

வத் நகர், பிரதமர் மோடியின் பிறந்த ஊராகும். வத்நகர் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதன் அழியாத தன்மை மற்றும் உயிரோட்டம் காரணமாக, அது ஒவ்வொரு சகாப்தத்திலும் நாட்டின் கலாச்சாரத்தில் தாக்கத்தை இந்த நகரம் ஏற்படுத்தியுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, வத்நகரின் பயணம் தொடர்ந்து வருகிறது. இந்த நகரம் 2,500 ஆண்டுகள் பழமையானது என்பதற்கான வரலாற்று சான்றுகள் எங்களிடம் உள்ளன. இன்று வரலாறு மற்றும் அகழ்வாராய்ச்சி இரண்டும் சேர்ந்தது போல் இருக்கும் அருங்காட்சியகம் உலகில் இல்லை. ஆனால், அதுபோன்ற அருங்காட்சியகம் ₹300 கோடியில் தற்போது கட்டப்பட்டுள்ளது.

குஜராத்திலுள்ள வத்நகரின் கலாச்சாரத்தை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்ததற்காக பிரதமர் மோடியை நான் பாராட்ட விரும்புகிறேன். அருங்காட்சியக கட்டிடமானது, வத்நகரின் 2,500 ஆண்டுகால வரலாற்றை உயிர்ப்பித்துள்ளது. இந்த அருங்காட்சியகம் வத்நகரின் பண்டைய நாகரிகத்தின் உணர்வை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கலாச்சாரம், வணிகம், நகர கட்டுமானம், கல்வி மற்றும் நிர்வாகம் பற்றிய விவரங்களையும் வழங்குகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in