Published : 17 Jan 2025 01:04 PM
Last Updated : 17 Jan 2025 01:04 PM

தேசிய விளையாட்டு விருதுகள்: மனு பாக்கர், குகேஷ் உள்பட 4 பேருக்கு கேல் ரத்னா - குடியரசுத் தலைவர் வழங்கினார்

புதுடெல்லி: துப்பாக்கி சுடும் வீராங்கனை மனு பாக்கர், செஸ் உலக சாம்பியன் டி. குகேஷ், இந்திய ஹாக்கி வீரர் ஹர்மன்பிரீத் சிங், பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற பிரவீன் குமார் ஆகியோர் நாட்டின் மிக உயரிய விளையாட்டு விருதான மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருதினை, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடமிருந்து பெற்றனர்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜன.17) நடைபெற்ற தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழாவில், 4 பேருக்கு மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருது, 32 பேருக்கு அர்ஜுனா விருது, பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும் துரோணாச்சாரியார் விருது ஆகியவற்றை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று(ஜன. 17) வழங்கினார்.

கடந்த ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக் கோட்டியில் துப்பாக்கிச் சுடும் போட்டியில் 2 வெண்கலப் பதக்கங்களை வென்ற மனு பாக்கர், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டம் வென்றி தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ், கடந்த 2023ல் சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம், கடந்த 2021 மற்றும் 2024 ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணியின் முன்னணி வீரர் ஹர்மன்பிரீத் சிங், உயரம் தாண்டுதலில் பாரிஸ் பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற பிரவீன் குமார் ஆகியோர், குடியரசுத் தலைவரிடம் இருந்து மேஜர் தியான்சந்த் கேல் ரத்னா விருதினைப் பெற்றனர்.

இதேபோல், ஹாக்கி, செஸ், குத்துச் சண்டை, துப்பாக்சிச்சூடு உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுக்களில் சிறந்து விளங்கும் ஜோதி யர்ராஜி, அன்னு ராணி, நீது, ஸ்வீட்டி, வங்கிட அகர்வால், அபிஷேக், சஞ்சய், ஜர்மன்பிரீத் சிங், சுக்ஜீத் சிங், ராகேஷ் குமார் உள்ளிட்ட 32 பேர் அர்ஜுனா விருது பெற்றனர். இவர்களில், முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 17 பேர் பாரா-தடகள வீரர்கள்.

வாழ்நாள் சாதனைக்கான அர்ஜுனா விருது சுச்சா சிங், முரளிகாந்த் ராஜாராம் பெட்கர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. சிறந்த பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது சுபாஷ் ராணா, தீபாலி தேஷ்பாண்டே, சந்தீப் சங்க்வான் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

பயிற்சியாளர்களுக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது முரளிதரன், அர்மாண்டோ அக்னெலோ கொலாகோ ஆகியோருக்கு வழங்கப்பட்டது. ராஷ்ட்ரிய கேல் புரோட்சஹான் புரஸ்கார் விருது இந்திய உடற்கல்வி அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது.

ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வழங்கப்படும் செயல்திறன்களுக்கு அதிகபட்ச முக்கியத்துவம் அளிக்கப்படும் புள்ளிகள் முறை மூலம் வருடாந்திர விருதுகள் தீர்மானிக்கப்படுகின்றன. கேல் ரத்னா விருதாளர்களுக்கு ரூ. 25 லட்சம் வெகுமதி, பதக்கம் மற்றும் பட்டயம் ஆகியவை வழங்கப்படும். அர்ஜுனா விருதாளர்களுக்கு ரூ. 15 லட்சம் வெகுமதி, பதக்கம் மற்றும் பட்டயம் வழங்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x