பொங்கல் பண்டிகை: ஆந்திராவில் கோடிக்கணக்கில் சேவல் பந்தயம்!

பொங்கல் பண்டிகை: ஆந்திராவில் கோடிக்கணக்கில் சேவல் பந்தயம்!

Published on

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆந்திராவில் கோடிக்கணக்கில் சேவல் பந்தயங்கள் நடைபெற்றன. பலர் வீடுகள், வீட்டு மனைகள், கார்களை இழந்துள்ளனர். பலர் கோடீஸ்வரர்களாக வீடு திரும்பி உள்ளனர். ஆந்திர அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்களும் சேவல் பந்தயங்களில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஆந்திர மாநிலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிருஷ்ணா, குண்டூர் மற்றும் கோதாவரி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக சேவல் பந்தயங்கள் கொடிகட்டி பறந்தன. இதில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் கை மாறின. வீடு, வீட்டு மனை பத்திரங்கள், நிலப் பட்டாக்கள், பஸ், லாரி, கார், பைக் போன்ற வாகனங்களின் ஆர்.சி புத்தகங்களும் இதில் கை மாறின. இந்த 4 நாட்களும் இரவை பகலாக்கும் பிரகாசமாக விளக்குகள், ராட்சத தொலைக்காட்சி பெட்டிகளுடன் இந்தப் பந்தயங்கள் நடைபெற்றன.

சேவல் பந்தயங்கள் தவிர, சீட்டாட்டம் என்ற பெயரில் பெரிய அளவில் சூதாட்டமும் நடைபெற்றது. கிருஷ்ணா, குண்டூர் மற்றும் கிழக்கு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக மதுபான விற்பனையும் அதிகரித்தது. விருந்து மற்றும் சூதாட்டங்களில் இந்த 4 மாவட்டங்களும் திளைத்தன. இதில் குண்டூர், கிருஷ்ணா ஆகிய இரு மாவட்டங்களில் மட்டும் கடந்த 4 நாட்களில் மது விற்பனை, சூதாட்டம், சேவல் பந்தயம் என சுமார் ரூ.800 கோடி வரை செலவிட்டுள்ளனர்.

இதேபோன்று கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் கடந்த 4 நாட்களில் ரூ.1,500 கோடிக்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இந்த சேவல் பந்தயங்களில் இம்முறை இளைஞர்களும் அதிகம் பங்கேற்றுள்ளனர். தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் சென்னையில் இருந்து பல தொழிலதிபர்கள், சினிமா பிரபலங்கள், அரசியல் பிரமுகர்களும் இதில் கலந்துகொண்டு, கோடிக்கணக்கில் பந்தயம் கட்டியுள்ளனர்.

இந்த சேவல் பந்தயங்களில் ஆந்திர அமைச்சர்கள் ரவீந்திரா, சத்யபிரசாத், எம்.பி. ஸ்ரீகிருஷ்ண தேவராயுலு, முன்னாள் எம்.பி. வெங்கடரமணா மற்றும் பல்வேறு எம்எல்ஏக்கள், சினிமா தயாரிப்பாளர் நாகவம்சி என பலர் பங்கேற்று ரசித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in