Published : 17 Jan 2025 01:53 AM
Last Updated : 17 Jan 2025 01:53 AM

தவறான தகவல்களை பரப்பும் ஏஐ வீடியோ: தலைமை தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

தவறான தகவல்களை பரப்பும் வகையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீடியோ, ஆடியோ, புகைப்படங்களை அரசியல் கட்சிகள் வெளியிடக்கூடாது என்று தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வரும் பிப்ரவரி 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. டெல்லி பேரவைத் தேர்தலையொட்டி செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட வீடியோ, புகைப்படங்களை 3 கட்சிகளும் வெளியிட்டு சமூக வலைதளங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.

கடந்த 1990-களில் வெளியான பாலிவுட் திரைப்படத்தின் வீடியோவை ஆம் ஆத்மி கட்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மாற்றி பிரச்சாரம் செய்து வருகிறது. அந்த வீடியோவில் வில்லன் கதாபாத்திரங்களுக்கு பதிலாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷாவின் முகங்களை மாற்றி, உரையாடல்களும் மாற்றப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீடியோ, புகைப்படங்கள் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் பல்வேறு கட்சிகள் தொடர்ந்து புகார்களை அளித்து வருகின்றன.

இந்த சூழலில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தலைமைத் தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோ, ஆடியோ, புகைப்படங்கள் தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருகிறது. இவை வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பிரச்சாரத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வை அரசியல் கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

கடந்த மக்களவைத் தேர்தலின்போது டெல்லி உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சமூக வலைதள பிரச்சாரம் தொடர்பான வழிகாட்டு நெறிகளை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த வழிகாட்டு நெறிகளை அரசியல் கட்சிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

குறிப்பாக தவறான தகவல்களை பரப்பும் வகையில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வீடியோ, ஆடியோ, புகைப்படங்களை அரசியல் கட்சிகள் வெளியிடக்கூடாது.

செயற்கை நுண்ணறிவால் (ஏஐ) தயாரான பிரச்சாரங்களை, வாக்காளர்கள் எளிதாக அடையாளம் காண, இவை ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டவை என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். நேர்மை, வெளிப்படைத்தன்மையுடன் தேர்தலை நடத்த அனைத்து கட்சிகளும் முழுஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x