வயநாடு நிலச்சரிவால் காணாமல் போனவர்களை உயிரிழந்ததாக அறிவிக்க கேரள அரசு முடிவு

வயநாடு நிலச்சரிவால் காணாமல் போனவர்களை உயிரிழந்ததாக அறிவிக்க கேரள அரசு முடிவு
Updated on
1 min read

வயநாடு நிலச்சரிவால் காணாமல் போனவர்களை உயிரிழந்ததாக அறிவிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை 30-ம் தேதி பெய்க கனமழையால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 263 பேர் உயிரிழந்ததாக அரசு ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் 35 பேர் காணவில்லை எனவும் புகார் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், காணாமல் போனவர்களை உயிரிழந்துவிட்டதாக அறிவிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் காணாமல் போனவர்களுடைய குடும்பத்தினருக்கு நிவாரண உதவி கிடைக்கும்.

இது தொடர்பாக கேரள அரசு நேற்று முன்தினம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: வயநாடு நிலச்சரிவின்போது காணாமல் போனவர்கள் குறித்து ஆராய உள்ளூர், மாவட்ட மற்றும் மாநில அளவில் வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்படும். உள்ளூர் குழுவில் பஞ்சாயத்து செயலாளர், கிராம அதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரி ஆகியோர் இடம்பெறுவார்கள். இக்குழு காணாமல் போனவர்கள் பட்டியலை சரிபார்த்து மாவட்ட பேரிடர் நிர்வாக ஆணையத்திடம் (டிடிஎம்ஏ) சமர்ப்பிக்கும்.

இந்தப் பட்டியலை டிடிஎம்ஏ ஆய்வு செய்த பின்னர், மாநில அளவிலான குழுவுக்கு தனது பரிந்துரையை அனுப்பி வைக்கும். கூடுதல் தலைமைச் செயலாளர் (உள் துறை), வருவாய் மற்றும் உள் துறை முதன்மை செயலாளர்கள் அடங்கிய மாநில அளவிலான குழு டிடிஎம்ஏ பரிந்துரையை ஆய்வு செய்து இறுதி பட்டியலை அரசுக்கு அனுப்பி வைக்கும். இதன் அடிப்படையில் மாநில அரசு காணாமல் போனவர்களை உயிரிழந்ததாக அறிவித்து, அவர்களின் குடும்பத்தினருக்கு இறப்பு சான்றிதழ் மற்றும் உரிய நிவாரண உதவிகளை வழங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in