

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, கடந்த 10-ம் தேதி முதல் பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 11 பக்தர்கள் நேற்று சுவாமி தரிசனம் செய்ய ரூ.300 டிக்கெட்டுகளுடன் திருமலையில் வைகுண்ட க்யூ காம்ப்ளக்ஸ் வழியாக சென்றனர். அங்கு டிக்கெட்டை ஸ்கேன் செய்த போது அவை போலி என்று தெரியவந்தது.
இதுகுறித்து தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் அந்த 11 பேரிடம் விசாரித்தனர். அப்போது அவர்கள் திருப்பதி தீயணைப்பு துறை ஊழியர் மணிகண்டா என்பவர் மூலம் 11 டிக்கெட்டுகளை ரூ.19 ஆயிரம் கொடுத்து வாங்கியதாக தெரிவித்தனர். மணிகண்டாவை பிடித்து விசாரித்தபோது, அவர் இடைத்தரகர் போல் செயல்பட்டு திருப்பதிக்கு வரும் பக்தர்களிடம் திருப்பதி டாக்ஸி ஓட்டுநர் சிவா மற்றும் சென்னை டாக்ஸி ஓட்டுநர் ஜெகதீஷ் ஆகியோர் மூலம் அதிக பணம் வசூலித்துள்ளார். தரிசன கவுன்ட்டரில் பணியாற்றும் தேவஸ்தான ஊழியர் லட்சுமிபதி மூலம் போலியாக ரூ.300 டிக்கெட்டுகளை வாங்கி தரிசனத்துக்கு பக்தர்களை அனுப்பி வைப்பது தெரிய வந்தது. இதற்கு மற்றொரு தீயணைப்பு படை வீரர் பானுபிரகாஷும் உடந்தையாக இருந்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.