Published : 16 Jan 2025 02:32 AM
Last Updated : 16 Jan 2025 02:32 AM
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் இருந்து போட்டியிடுவதற்கு முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
மொத்தம் 70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முன்னாள் முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால், புதுடெல்லி தொகுதியில் போட்டியிடுவதற்கு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக கேஜ்ரிவால் தனது மனைவி சுனிதாவுடன் அனுமன் மற்றும் வால்மீகி கோயில்களில் வழிபட்டார். பிறகு ஆம் ஆத்மி அலுவலகத்தில் இருந்து புதுடெல்லி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை நடைப்பயணமாக வந்தார். அவருடன் ஆம் ஆத்மி தொண்டர்கள் நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக வந்தனர்.
வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் கேஜ்ரிவால் கூறுகையில், “வரும் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முழுப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும். குற்றச்சாட்டுகள் அடிப்படையில் அல்லாமல் பணிகளின் அடிப்படையில் டெல்லி மக்கள் வாக்களிக்க வேண்டும்.
பாஜகவுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை, முதல்வர் வேட்பாளரை அக்கட்சி அறிவிக்கவில்லை. அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் என்ன பணிகளை செய்வார்கள் என்று கூறப்படவில்லை. ஒரு ஜோடி காலணியை கொடுத்து டெல்லி மக்களை விலைக்கு வாங்க முடியாது. பாஜக என்ன செய்கிறது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்" என்றார்.
கடந்த 2013 முதல் புதுடெல்லி தொகுதியில் இருந்து கேஜ்ரிவால் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். அவரை எதிர்த்து இம்முறை பாஜக சார்பில பர்வேஷ் வர்மாவும் காங்கிரஸ் சார்பில் சந்தீப் தீட்சித்தும் போட்டியிடுகின்றனர்.
மணிஷ் சிசோடியா: டெல்லி தேர்தலில் ஜங்புரா தொகுதியில் போட்டியிடுவதற்கு ஆம் ஆத்மி மூத்த தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான மணிஷ் சிசோடியா நேற்று ஊர்வலமாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார். முன்னதாக அங்கூரி மாதா கோயிலுக்கு சென்று அவர் வழிபட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT