

செயற்கை நுண்ணறிவு மூலம் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ஜெய் ஷா வீடியோக்களை உருவாக்கி பதிவிட்டதற்காக ஆம் ஆத்மி கட்சி மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் வீடியோக்கள், புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மூலம் உருவாக்கி அதை பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் டெல்லி நார்த் அவென்யூ போலீஸ் நிலையத்தில் இதற்கு எதிராக பாஜக சார்பில் புகார் தரப்பட்டது.
இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி மீது டெல்லி போலீஸார் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். அந்த முதல் தகவல் அறிக்கையில், ஆட்சேபகரமான வகையில் பிரதமர், மத்திய உள்துறை அமைச்சரின் புகைப்படங்கள், வீடியோக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள், வீடியோக்கள் கடந்த 10-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இதுபோன்ற பொய் வழக்குகளை பதிவு செய்வது பாஜகவின் வேலை என்றும், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இதுபோன்ற செயல்களை பாஜக செய்து வருகிறது என்றும் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. மேலும், பாஜகவின் அடுத்த இலக்கு முதல்வர் ஆதிஷி சிங் மர்லேனா மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது இருக்கும் என்றும் அந்தக் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.