Published : 15 Jan 2025 09:03 AM
Last Updated : 15 Jan 2025 09:03 AM
புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்க துறைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் அனுமதி வழங்கப்பட்ட நிலையில் உள்துறை அமைச்சகம் இசைவு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கடந்த நவம்பர் 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி (சிஆர்பிசி), அரசின் முன் அனுமதி பெறாமல், அரசு ஊழியர் ஒருவரை பணமோசடி வழக்கின் கீழ் கைது செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தது. முன்பு, அரசு ஊழியர்களுக்கு எதிராக அமலாக்கத் துறை வழக்குத் தொடர்வதற்கு அரசின் அனுமதி தேவையில்லை. அவை சிபிஐ மற்றும் மாநில காவல் துறை போன்ற பிற விசாரணை அமைப்புகளுக்கே கட்டாயமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தத் தீர்ப்பின்படி கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அனுமதி கோரி, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு அமலாக்க துறை கடிதம் எழுதியிருந்தது. அவரும் அதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு ஆம் ஆத்மிக்கு அரசியல் களத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. சிறையிலிருந்து வெளிவந்த கேஜ்ரிவால், “என் மீதான குற்றச்சாட்டுகள் போலியானவை. இனி தேர்தலில் வெற்றி பெற்று மக்கள் தீர்ப்பால் குற்றச்சாட்டுகள் பொய் என நிரூபித்த பின்னர் மீண்டும் முதல்வர் பதவியில் அமர்வேன்.” என சூளுரைத்துள்ளார்.
அடுத்த மாதம் 5-ம் தேதி டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்கத் துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.இது டெல்லி அரசியல் களத்தில் பரபரப்பைக் கூட்டியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT