டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவு: மத்திய அரசை சாடிய எதிர்க்கட்சிகள்

கோப்புபபடம்
கோப்புபபடம்
Updated on
1 min read

புதுடெல்லி: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. தற்போது ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.86.54 என உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

ஜெய்ராம் ரமேஷ்: “பிரதமர் நரேந்திர மோடி, பிரதமராகப் பதவியேற்ற போது அவருக்கு வயது 64. அப்போது டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.58.58 என இருந்தது. ரூபாயை வலுப்படுத்துவது குறித்து அவர் அப்போது பேசி இருந்தார். மேலும், அதன் வீழ்ச்சியை சிலரது வயதுடன் கேலி செய்யும் வகையில் பேசினார்.

இப்போது பிரதமர் மோடி 75 வயதை எட்ட உள்ளார். இந்த நிலையில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர் சரிவின் காரணமாக ஏற்கனவே ரூ.86-னை தாண்டிச் சென்றுவிட்டது” என எக்ஸ் தள பதிவில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

டி. ராஜா: “இந்தியாவின் வெளிநாட்டு கடன் ஏற்கனவே ரூ.200 லட்சம் கோடியாக உள்ளது. இந்த சூழலில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு தேசத்தின் பொருளாதாரம் சீர்குலைந்து போயுள்ள நிலையை எடுத்துக்காட்டுகிறது. பிரதமர் மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, ​​ரூபாயின் மதிப்பை தேசத்தின் மரியாதையுடன் ஒப்பிட்டார். தனது மூன்றாவது பதவிக்காலத்தில், இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை உறுதி செய்வேன் என்று அவர் கூறினார். இது இப்படித்தான் செய்யப்படுமா” என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார்.

இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதற்கு காரணம் ஆளும் அரசின் திறமையின்மை என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி சாகேத் கோகலே விமர்சித்துள்ளார். இதே போல சிவசேனா கட்சியின் (உத்தவ் பால் தாக்கரே அணி) மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி, ‘இந்த விவகாரம் குறித்து அரசாங்கம் இன்னும் பேசவில்லை’ என கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in