‘சந்தேகம் எழுகிறது’ - சிஏஜி அறிக்கை விவகாரத்தில் டெல்லி அரசை சாடிய நீதிமன்றம்

அதிஷி | கோப்புப் படம்
அதிஷி | கோப்புப் படம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக சிஏஜியின் அறிக்கைக்கு, தாமதமாக பதிலளித்ததற்காக ஆம் ஆத்மி அரசை டெல்லி உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது.

பிப்ரவரி 5 ஆம் தேதி டெல்லி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டெல்லி அரசின் மதுபானக் கொள்கை தொடர்பாக சிஏஜியின் அறிக்கை இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், இந்த முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ.2,026 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக மற்றும் ஆம் ஆத்மி இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.

சிஏஜியின் அறிக்கையை சபாநாயகரிடம் தாக்கல் செய்வதில் தாமதம் செய்ததற்காக ஆம் ஆத்மி கட்சி தலைமையிலான அரசை டெல்லி உயர் நீதிமன்றம் கண்டித்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி சச்சின் தத்தா அமர்வு, “ஆளுநருக்கு அறிக்கைகளை அனுப்புவதில் ஏற்பட்ட தாமதமும், இந்த விஷயத்தை நீங்கள் கையாள்வதும் உங்கள் நேர்மை குறித்து சந்தேகங்களை எழுப்புகிறது. இந்த விவகாரத்தை நீங்கள் தொடர்ந்து இழுத்தடிப்பது துரதிர்ஷ்டவசமானது.

நீங்கள் உடனடியாக அறிக்கைகளை சபாநாயகருக்கு அனுப்பி, அவையில் இது குறித்த விவாதத்தைத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் அதை செய்யவில்லை.” என்று சாடியுள்ளது.

பாஜக எம்எல்ஏக்கள் சிலர், சபாநாயகர் சிறப்பு அமர்வை கூட்ட உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை வலியுறுத்தினர். ஆனால், சபாநாயகருக்கு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும், முடிவெடுப்பதற்கு முன்பு இரு தரப்பினரையும் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. இதனிடையே டெல்லி அரசு, இதில் அரசியல் நோக்கம் உள்ளது. எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளோம் எனக் கூறியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in