Published : 13 Jan 2025 02:43 AM
Last Updated : 13 Jan 2025 02:43 AM
சாலை விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி, நடிகர் அனுபம் கேர் உடன் சாலை பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார். அப்போது, கட்கரி கூறும்போது, “சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை உடனடியாக (1 மணி நேரத்துக்குள்) மருத்துவமனையில் சேர்ப்பதன் மூலம் அவர்களுடைய உயிரை காப்பற்ற முடியும். இத்தகைய பணியை செய்பவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது மிகவும் குறைவாக உள்ளதால், இந்தத் தொகையை 5 மடங்கு (ரூ.25,000) உயர்த்துமாறு சாலை போக்குவரத்து அமைச்சக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.
சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பொதுமக்களை ஊக்குவிப்பதற்காக வெகுமதி வழங்கும் திட்டத்தை அக்டோபர் 2021-ல் மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனாலும், பணம் அல்லது வெகுமதியை எதிர்பார்க்காமல் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்வதும், உடனடி சிகிச்சை கிடைக்க உதவ வேண்டியதும் நம் அனைவரின் கடமை என சாலை போக்குவரத்து அமைச்சக இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்யும் உண்மையான நபர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் பெறுவதை உறுதி செய்வதற்காக சில நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக பல்வேறு நிலைகளில் சரிபார்த்த பின்னரே வெகுமதி வழங்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT