Published : 13 Jan 2025 02:39 AM
Last Updated : 13 Jan 2025 02:39 AM
உத்தரபிரதேசத்தில் மகா கும்பமேளா இன்று தொடங்க உள்ள நிலையில், ஏஐ கேமரா, என்எஸ்ஜி கமாண்டோ உட்பட உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா இன்று தொடங்குகிறது. 12 ஆண்டுக்குப் பிறகு நடைபெறும் இந்த விழா உலகின் மிகப்பெரிய மத திருவிழா ஆகும். பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 45 கோடி பேர் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கங்கை, யமுனை, சரஸ்வதி நிதிகள் சங்கமிக்கும் இடத்தில் பக்தர்கள் புனித நீராட உள்ளனர். இதையடுத்து, பிரயாக்ராஜ் நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு காவல் துறைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பிரயாக்ராஜ் நகரில் உள்ள கோயில்கள், அகாராக்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல் துறை தலைவர் (டிஜிபி) பிரசாந்த் குமார் தெரிவித்துள்ளார்.
பிரயாக்ராஜ் நகரை இணைக்கும் 7 முக்கிய வழித்தடங்களில் 102 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் வழியாக வரும் வாகனங்கள் மற்றும் தனிநபர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.
71 ஆய்வாளர்கள், 234 துணை ஆய்வாளர்கள், 645 காவலர்கள் மற்றும் 113 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக டிஜிபி பிரசாந்த் குமார் தெரிவித்தார்.
கண்காணிப்பை பலப்படுத்துவதற்காக, 5 வஜ்ரா வாகனங்கள், 10 ட்ரோன்கள் மற்றும் சதித் திட்டங்களை முறியடிக்கும் 4 குழுக்கள் 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நீருக்கடியில் செயல்படும் 113 ட்ரோன்கள், 2,700 செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கேமராக்கள் உட்பட நவீன தொழில்நுட்பங்களும் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மாநில போலீஸாருடன் தேசிய பாதுகாப்புப் படையினர் (என்எஸ்ஜி), தீவிரவாத தடுப்புப் படையினர் (ஏடிஎஸ்) உள்ளிட்டோரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜனவரி 14 (மகர சங்கராந்தி), 29 (மவுனி அமாவாசை) மற்றும் பிப்ரவரி 3 (வசந்த பஞ்சமி) ஆகிய 3 தினங்கள் புனித நீராடலுக்கான சிறப்பு தினங்கள் ஆகும். இந்த நாட்களில் கூட்டும் வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT