வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500 உதவித் தொகை: டெல்லி தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500 உதவித் தொகை: டெல்லி தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி
Updated on
1 min read

வரும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிபெறும்பட்சத்தில் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500 உதவித் தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.

இதுகுறித்து ராஜஸ்தானின் முன்னாள் துணை முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சச்சின் பைலட் நேற்று கூறியதாவது: டெல்லி பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று அதிகாரத்துக்கு வரும்பட்சத்தில் " யுவா உடான் யோஜனா" திட்டம் அறிமுகப்படுத்தப்படும். நன்றாக படித்துவிட்டு வேலையில்லாமல் இருக்கும் டெல்லி இளைஞர்களுக்காக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதன்படி மாதத்துக்கு ரூ.8,500 உதவித் தொகையாக ஓராண்டுக்கு வழங்கப்படும்.

இது, வீட்டில் முடங்கிக் கிடக்கும் இளைஞர்கள் பணம் பெறும் திட்டமல்ல. மாறாக யார் ஒருவர் தங்களது நிறுவனம், தொழிற்சாலையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்துகிறாரோ அவர்களுக்கு இந்த நிதி உதவி அவர்கள் சார்ந்த நிறுவனங்கள் மூலமாகவே வழங்கப்படும்.

மக்கள் பயிற்சி பெற்ற துறைகளில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு தேவையான உதவிகளை வழங்க முயற்சிப்போம். இதன் மூலம் மக்கள் தங்களது திறனை மேம்படுத்த முடியும். இவ்வாறு சச்சின் பைலட் கூறினார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சி பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு வருகிறது. ஜனவரி 6-ம் தேதி " பியாரி தீதி யோஜனா" திட்டத்தை அறிவித்து மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. ஜனவரி 8-ல் " ஜீவன் ரக்சா யோஜனா" திட்டத்தின் மூலம் ரூ.25 லட்சம் வரையிலான இலவச காப்பீட்டு திட்டத்தை அறிவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in