தேர்தலை எதிர்கொள்ள மக்களிடம் நிதி கோரும் பிரச்சாரத்தை தொடங்கிய டெல்லி முதல்வர் அதிஷி

டெல்லி முதல்வர் அதிஷி | கோப்புப்படம்
டெல்லி முதல்வர் அதிஷி | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் கல்காஜி தொகுதி வேட்பாளருமான அதிஷி, தேர்தலில் போட்டியிட பொதுமக்களிடம் நிதி திரட்டும் பிரச்சாரத்தை (crowd funding campaign) ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார். மேலும் கட்சியின் பணிகள் மற்றும் நேர்மையை மக்கள் ஆதரிப்பார்கள் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிஷி, மக்கள் பணத்தை நன்கொடையாக செலுத்துவதற்கான ஆன்லைன் லிங்கினை வெளியிட்டார். மேலும், "தேர்தலில் போட்டியிடுவதற்கு தனக்கு 40 லட்சம் தேவை. ஆம் ஆத்மி கட்சி எப்போதும் சாதாரண மக்களின் சிறிய நன்கொடை பணத்தின் மூலமாகவே தேர்தல்களைச் சந்தித்து வருகிறது. இது நேர்மையான அரசியல் பணிக்கு உதவுகிறது" என்று தெரிவித்தார்.

இதுதொடர்பாக டெல்லி முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில், "கடந்த 5 ஆண்டுகளாக, ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக, அமைச்சராக மற்றும் தற்போது டெல்லியின் முதல்வராக இருக்க எனக்கு நீங்கள் உங்களின் ஆதரவினை அளித்துள்ளீர்கள். உங்களின் ஆசீர்வாதமும் ஆதரவும் இல்லாமல் இது எதுவும் சாத்தியமாகியிருக்காது.

ஒரு இளம், படித்த பெண்ணாக தனியாக நடக்க முடியாத அரசியல் பாதையில், உங்களின் நம்பிக்கையும், நன்கொடையும் எனக்கு ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்க உதவி இருக்கிறது.

தற்போது நாம் தேர்தல் பிரச்சாரத்தை எதிர்கொள்கிறோம். மீண்டும் எனக்கு உங்களின் ஆதரவு தேவை. தயவுசெய்து எனது கூட்டு நிதிதிரட்டும் பிரச்சாரத்துக்கு நிதி அளித்து உதவுங்கள். வளர்ச்சி மற்றும் நம்பிக்கைக்கான இந்த பயணத்தை நாம் ஒன்றிணைந்து தொடர்வோம்" என்று தெரவித்துள்ளார். மேலும் நிதியளிப்பதற்கான இணைப்பையும் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், ஜங்புரா தொகுதி வேட்பாளருமான மணீஷ் சிசோடியா, தேர்தல் பிரச்சாரத்துக்கு நிதி வழங்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து கூட்டு நிதி திரட்டுவதற்கான தளத்தை தொடங்கி வைத்தார்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி பேரவைக்கு பிப்ரவரி 5ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. பிப்.8-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in