Published : 11 Jan 2025 05:14 AM
Last Updated : 11 Jan 2025 05:14 AM

வெளிநாடுகளில் பணம், சொத்து குவிப்பவர்களை கண்டறிய ‘சில்வர்’ நோட்டீஸ் அறிமுகம் செய்தது இன்டர்போல்

உள்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தை வெளிநாடுகளில் பதுக்குபவர்களை கண்டறிய ‘சில்வர்’ நோட்டீஸை இன்டர்போல் (சர்வதேச போலீஸ்) அறிமுகம் செய்துள்ளது.

சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பு அமைப்பு (இன்டர்போல்) பிரான்ஸ் நாட்டின் லியான் நகரில் செயல்படுகிறது. தற்போது இந்த அமைப்பு 8 நிறங்களில் நோட்டீஸ் வெளியிடுகிறது. ஒரு நாட்டில் தேடப்படும் நபரை வேறுநாட்டில் கைது செய்வதற்கு ரெட் நோட்டீஸை இன்டர்போல் வெளியிடுகிறது. காணாமல் போனவர்களை கண்டறிய மஞ்சள் நோட்டீஸூம், குற்ற விசாரணை தொடர்பாக குற்றவாளி பற்றி கூடுதல் விபரம் அறிய நீல நிற நோட்டீஸூம், அடையாளம் காணப்படாத உடல்கள் பற்றிய தகவல் அறிய கருப்பு நோட்டீஸூம், ஒருவரின் குற்ற நடவடிக்கைகள் பற்றி எச்சரிக்கை விடுக்க பச்சை நிற நோட்டீஸூம், பொது மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நபர் பற்றி எச்சரிக்கை விடுக்க ஆரஞ்சு நோட்டீஸூம் இன்டர்போல் அமைப்பால் வெளியிடப்படுகிறது. இதுபோல் பல தேவைகளுக்காக பல நிறங்களில் நோட்டீஸ்கள் வெளியிடப்படும்.

இந்நிலையில் ஒரு நாட்டைச் சேர்ந்தவர் சட்டவிரோதமாக சம்பாதிக்கும் பணத்தில் வெளிநாடுகளில் சொத்துக்களை வாங்கி குவிப்பவர்களை கண்டறிய சில்வர் நோட்டீஸை இன்டர்போல் அறிமுகம் செய்துள்ளது. பரிசோதனை முயற்சியாக மேற்கொள்ளப்படும் இந்த திட்டத்தில் இந்தியா உட்பட 52 நாடுகள் இணைந்துள்ளன. இத்தாலி வேண்டுகோள்படி முதல் சில்வர் நோட்டீஸை இன்டர்போல் வெளியிட்டுள்ளது. இத்தாலியை சேர்ந்த பிரபல குற்றவாளி ஒருவர், வெளிநாடுகளில் குவித்துள்ள சொத்துக்களை கண்டறிய அந்நாட்டு அரசு வேண்டுகோள் விடுத்தது. இதையடுத்து முதல் சில்வர் நோட்டீஸை இன்டர்போல் வெளியிட்டுள்ளது.

பொருளாதார குற்றங்களில் ஈடுபட்ட 10 குற்றவாளிகளின் பெயர் இந்தியாவிடம் உள்ளது. இவர்களின் கருப்பு பணம் எவ்வளவு வெளிநாடுகள் கொண்டு செல்லப்பட்டது என்பதற்கு துல்லியமான மதிப்பீடே இல்லை. இன்டர்போல் அறிமுகம் செய்துள்ள இந்த சில்வர் நோட்டீஸ், இந்தியாவுக்கு உதவியாக இருக்கம். உள்நாட்டில் சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தில் வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் பதுக்கிவைப்பவர்கள், சொத்துகளை குவிப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க இந்த சில்வர் நோட்டீஸ் இந்தியாவுக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 500 நோட்டீஸ்கள் பிறப்பிக்க முடியும். இந்த நோட்டீஸ்கள் இத்திட்டத்தில் பங்கேற்கும் நாடுகளுடன் சமமாக பகிர்ந்து கொள்ளப்படும். ஒரு நாடு சார்பில் கேட்கப்படும் தகவல்களை, இன்டர்போல் பொதுவில் வெளியிடாது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x