Published : 11 Jan 2025 05:11 AM
Last Updated : 11 Jan 2025 05:11 AM

ஜானி வாக்கர் விஸ்கி விற்பனை தடையை நீக்க 15,000 டாலர் பணம் பெற்றதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு

ஜானி வாக்கர் விஸ்கி மீதான விற்பனை தடையை நீக்க, கார்த்தி சிதம்பரத்துக்கு, டியாகோ ஸ்காட்லேண்ட் நிறுவனம் 15,000 அமெரிக்க டாலர் பணம் செலுத்தியதாக புதிய ஊழல் வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது.

இங்கிலாந்தின் பிரபல மதுபான நிறுவனமான டியாகோ ஸ்காட்லாண்ட் தனது தயாரிப்புகளை இந்தியாவில் வரி இன்றி விற்பனை செய்ய இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம் கடந்த 2005-ம் ஆண்டு தடை விதித்தது. இதனால் இந்தியாவில் அதிகம் விற்பனையான ஜானி வாக்கர் விஸ்கி விற்பனை வெகுவாக பாதித்தது. டியாகோ ஸ்காட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய வர்த்தகம் 70 சதவீதம் பாதிப்படைந்தது. இதனால் ஜானி வாக்கர் விஸ்கி மீதான விற்பனை தடையை நீக்க முன்னள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை உதவியை டியாகோ ஸ்காட்லேண்ட் நிறுவனம் நாடியது.

ஆலோசனை கட்டணம் என்ற பெயரில் கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது உதவியாளர் பாஸ்கர் ராமன் கட்டுப்பாட்டில் இருந்த ‘அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கல்சல்டிங் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்துக்கு 15,000 அமெரிக்க டாலரை டியாகோ ஸ்காட்லேண்ட் மற்றும் செக்கோயா கேபிடல்ஸ் என்ற நிறுவனங்கள் செலுத்தியுள்ளன. இதையடுத்து டியாகோ ஸ்காட்லேண்ட் நிறுவனம் விற்பனை தடையில் இருந்து விடுபட கார்த்தி சிதம்பரம் உதவியுள்ளார் என சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் ஏற்கெனவே பல ஊழல் வழக்குகளை சந்தித்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அவரை சிபிஐ கடந்த 2018-ம் ஆண்டு கைது செய்தது. அதன் பின் அவர் ஜாமீன் பெற்றார். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் மீது புதிய ஊழல் வழக்கை சிபிஐ பதிவு செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x