ரூ.210 கோடிக்கு மின்சார கட்டணம்: இமாச்சல் தொழிலதிபர் அதிர்ச்சி

ரூ.210 கோடிக்கு மின்சார கட்டணம்: இமாச்சல் தொழிலதிபர் அதிர்ச்சி
Updated on
1 min read

இமாச்சல பிரதேசத்தில் ரூ.210 கோடிக்கு மேல் மின்சார கட்டணம் வந்திருப்பதை கண்டு தொழிலதிபர் ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.

இமாச்சல பிரதேசத்தின் ஹமீர்பூர் மாவட்டம், பெகர்வின் ஜட்டன் கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் லலித் திமான். இவருக்கு 2024 டிசம்பருக்கான மின்சார கட்டணமாக ரூ.210 கோடியே 42 லட்சத்து 8,405-க்கு அண்மையில் ரசீது வந்தது. அதற்கு முந்தைய மாத மின்சார கட்டணமாக அவர் ரூ.2,500 மட்டுமே செலுத்தியிருந்தார். இந்நிலையில் டிசம்பருக்கான கட்டணத்தை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து திமான், மின் வாரிய அலுவலகம் சென்று புகார் அளித்தார். அப்போது அதிகாரிகள், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதிக மின் கட்டணம் வந்துள்ளதாக கூறினர். பிறகு மின்சார கட்டணத்தை ரூ.4,047 ஆக குறைத்தனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் குஜராத் மாநிலம், வல்சாத்தில் இதேபோன்ற சம்பவம் நடந்தது. அங்கு அன்சாரி என்ற தையல்காரருக்கு ரூ.86.41 லட்சம் மின்சார கட்டணம் வந்தது. அவரது கடைக்கு அரசுக்கு சொந்தமான 'தக் ஷின் குஜராத் விஜ் கம்பெனி' மின்சாரம் அளிக்கிறது.

இந்த நிறுவனம் தெற்கு குஜராத்தில் 7 மாவட்டங்களில் 32 லட்சத்துக்கும் மேற்பட்ட நுகர்வோரை கொண்டுள்ளது. அன்சாரி அந்தப் பெரிய தொகை குறித்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் மின்சார ரீடிங் எடுத்தவர் தவறுதலாக 1,0 ஆகிய 2 இலக்கங்களை கூடுதலாக சேர்த்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து மின்சார கட்டணம் ரூ.1,540 ஆக சரி செய்யப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in