Published : 11 Jan 2025 05:06 AM
Last Updated : 11 Jan 2025 05:06 AM
கடந்த 3 ஆண்டுகளாக போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவித்த 970 பேருக்கு ரூ.11 கோடிக்கு மேல் குஜராத் அரசு பரிசு வழங்கியுள்ளது.
போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு, பறிமுதல் செய்யப்படும் போதைப் பொருளின் மதிப்பில் 20 சதவீதத்தை பரிசாக வழங்கும் திட்டத்தை குஜராத் அரசு கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கியது. இதன்படி கடந்த 3 ஆண்டுகளில் போதைப் பொருள் கடத்தல் பற்றி தகவல் அளித்த 970 பேருக்கு ரூ.11 கோடிக்கு மேல் குஜராத் அரசு பரிசு வழங்கியுள்ளது. இவர்களில் 64 பேர் டிஜிபி தலைமையிலான குழு மூலமாக ரூ.51,202 பரிசு பெற்றனர். 169 பேர் உள்துறை மூலமாக ரூ. 6,36,86,664 பரிசு பெற்றுள்ளனர். 737 பேர் போதைப் பொருள் கட்டுப்பாட்டு பிரிவு மூலம் ரூ.5,13,40, 680 பரிசு பெற்றுள்ளனர்.
இத்திட்டத்தின் மூலம் கடந்த 2021-ம் ஆண்டு முதல் 87,607 கிலோ போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.16,155 கோடி. இந்த கடத்தலில் தொடர்புடைய 2,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து குஜராத் அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ போதைப் பொருள் கடத்தலை தடுக்க குஜராத் அரசு கொண்டு வந்த இந்த தனிச் சிறப்பான பரிசு முறை வெற்றியடைந்துள்ளது. இத்திட்டத்தை நாட்டிலேயே முதலில் அமல்படுத்திய மாநிலம் குஜராத்’’ என்றார்.
இத்திட்டத்தின் கீழ் போலீஸார் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் வெகுமதி அளிக்கப்படுகிறது. ஒரு பறிமுதலுக்கு ரூ.2 லட்சம் வரை அவர்கள் பரிசு பெறலாம். அவர்களது பணிக்காலத்தில் அவர்கள் ரூ.20 லட்சம் வரை வெகுமதி பெற உச்ச வரம்பு உள்ளது. போதைப் பொருள் வழக்குகளில் அலுவலக பணிகளில் உதவியாக இருக்கும் தனிநபர்களுக்கும் ஒரு பறிமுதலுக்கு ரூ.2,500 பரிசு பெறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT