எமர்ஜென்சி படத்தைக் காண பிரியங்கா காந்திக்கு கங்கனா ரனாவத் அழைப்பு

எமர்ஜென்சி படத்தைக் காண பிரியங்கா காந்திக்கு கங்கனா ரனாவத் அழைப்பு
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தமாதம் திரைக்கு வரவிருக்கும்,‘எமர்ஜென்சி’ திரைப்படத்தைக் காண காங்கிரஸ் எம்.பி., பிரியங்கா காந்திக்கு அழைப்பு விடுத்ததாக நடிகையும் எம்பியுமான கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இந்தத் திரைப்படத்தில் கங்கனா முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிரியங்கா காந்தியை சந்தித்து தான் உரையாடிய விவரத்தை பகிர்ந்துள்ள கங்கனா ரனாவத், திரைப்படத்தில் இந்திரா காந்தியை சித்தரிக்க தான் எடுத்துக்கொண்ட சிரத்தையையும் எடுத்துரைத்துள்ளார். இதுகுறித்து கங்கனா கூறுகையில், "உண்மையில் நாடாளுமன்றத்தில் நான் பிரியங்கா காந்தியை சந்தித்தேன். முதலில் நான் அவரிடம் சொன்னது, நீங்கள் ‘எமர்ஜென்சி’ படத்தை பார்க்க வேண்டும் என்று தெரிவித்தேன். அதற்கு அவர் மிகவும் கனிவுடன் ‘நிச்சயமாக , பார்க்கலாம்’ என்றார். மீண்டும் நான் நிச்சயம் அது உங்களுக்கு பிடிக்கும் என்று கூறினேன்" என்று தெரிவித்தார்.

இந்திரா காந்தியை திரையில் சித்தரிக்க எடுத்துக்கொண்ட சிரத்தை குறித்து கூறும்போது, "இது ஓர் அத்தியாயத்தின், ஓர் ஆளுமையின் மிகவும் உணர்வுப்பூர்வமான மற்றும் விவேகமான சித்தரிப்பு என்று நான் நம்புகிறேன். இந்திரா காந்தியை திரையில் கண்ணியமாக சித்தரிப்பதில் நான் அதிக கவனத்துடன் இருந்தேன்.

அவர் குறித்த எனது ஆய்வில் தனது தனிப்பட்ட வாழ்வில் கணவர், நண்பர்கள் மற்றும் சர்ச்சைக்குரிய சமன்பாடுகளுடனான உறவுகளில் தனித்த கவனம் செலுத்தியதை நான் கவனித்தேன். ஒரு நபருக்குள் இன்னும் நிறைய இருக்கிறது என்று நான் நினைத்துக்கொண்டேன்.

பெண்கள் என்று வரும் போது, அவர்கள் எப்போதும் தங்களைச் சுற்றியுள்ள ஆண்களுடைய சமன்பாடுகள் மற்றும் சந்திப்புகளுக்குள்ளேயே தள்ளப்படுகிறார்கள். அதனால் நான் அவைகளுக்குள் எல்லாம் சிறப்பு கவனம் செலுத்தினேன்" என்று தெரிவித்தார்.

எமர்ஜென்சி திரைப்படம், இந்திய வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான காலக்கட்டங்களில் ஒன்றான கடந்த 1975-ம் ஆண்டு இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட அவசரநிலை குறித்து ஆராய்கிறது. கங்கனா ரனாவத் இயக்கி நடித்துள்ள இந்தத் திரைப்படத்தில், அனுபம் கேர் மற்றும் ஸ்ரேயாஸ் தல்பாடே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எமர்ஜென்சி திரைப்படம் ஜனவரி 17ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in