சாகும் வரை உண்ணாவிரதத்தின் 4ம் நாள் - ராகுல், தேஜஸ்வி ஆதரவினை கோரும் பிரசாந்த் கிஷோர்!

சாகும் வரை உண்ணாவிரதத்தின் 4ம் நாள் - ராகுல், தேஜஸ்வி ஆதரவினை கோரும் பிரசாந்த் கிஷோர்!
Updated on
2 min read

பாட்னா: பிபிஎஸ்சி(Bihar Public Service Commission) தேர்வினை ரத்து செய்யக்கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வரும் ஜன் சுராஜ் கட்சித் தலைவர் பிரசாந்த் கிஷோர், இந்தப் போராட்டத்துக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் ஆதரவினை கேரியுள்ளார்.

பிஹாரின் காந்தி மைதானத்தில், ‘அம்ரான் அன்சான்’ என்று சாகும் வரை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தி வரும் பிரசாந்த் கிஷோர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்தப் போராட்டம் அரசியல் சார்பற்றது, இது எனது கட்சி அடையாளத்தின் கீழ் நடத்தப்படவில்லை. நேற்றிரவில், 51 இளைஞர்கள் இணைந்து, இந்தப் போராட்டத்தை வழிநடத்தும் ‘யுவ சத்யாகிரக சமிதி’ (ஒய்எஸ்எஸ்) என்ற அமைப்பை உருவாக்கினர். அதில் பிரசாந்த் கிஷோர் ஒரு அங்கமே. 100 எம்பிக்களை வைத்திருக்கும் ராகுல் காந்தி, 70 எம்எல்ஏக்கள் வைத்திருக்கும் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட அனைவரும் இந்தப் போராடத்துக்கு ஆதரவு தரவேண்டும்.

இந்தத் தலைவர்கள் எங்களை விட மிகப் பெரியவர்கள். அவர்களால் காந்தி மைதானத்தில் 5 லட்சம் மக்களை ஒன்று திரட்ட முடியும். இது அதற்கான நேரம். இளைஞர்களின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. மூன்று ஆண்டுகளில் 87 முறை தடியடிக்கு உத்தரவிட்ட கொடூரமான ஆட்சியை நாங்கள் எதிர்கொள்கிறோம்.

புதிதாக உருவாக்கப்பட்ட ஒய்எஸ்எஸின் 51 உறுப்பினர்களில் 42 பேர் இந்த போராட்டத்தைத் தொடர முடிவு செய்துள்ளனர். அவர்கள் அனைவரும் பல்வேறு அரசியல் கட்சிகளின் அங்கத்தினர்களாக உள்ளனர். ஆனால் இப்போது அவர்கள் அனைவரும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் நலன்களுக்காக ஒரே குடையின் கீழ் ஒருங்கிணைந்து போராடுவதற்காக ஒன்றிணைந்துள்ளனர். ஒய்எஸ்எஸ் என்பது அரசியல்சார்பற்ற அமைப்பு. நான் அவர்களுக்கு ஆதரவளிக்கவே இங்கே இருக்கிறேன்.

டிசம்பர் 29ம் தேதி போராட்டம் நடத்திய பிபிஎஸ்சி தேர்வர்களின் மீது மாநில போலீஸார் தண்ணீர் பீச்சியடித்து, தடியடி நடத்தியுள்ளனர். இது ஜனநாயக படுகொலை. தாங்கள் அங்கம் வகிக்கும் ஒரு ஆட்சிக்கு எதிராக பேசுவதற்கு எந்த பாஜக தலைவருக்கும் தைரியம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆனால் அவர்களில் யாராவது மனசாட்சியால் வழிநடத்தப்பட்டால் அவர்கள் வரவேற்கப்படுவார்கள்.

இந்த மாநிலத்தின் இளைஞர்கள் மக்களவைத் தேர்தலில் மற்ற யாருக்கும் வாக்களிக்காமல் மோடிக்கே வாக்களித்ததாக அடிக்கடி சொல்வதுண்டு. ஆனால் மோடி ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அவரிடமிருந்து இந்த இளைஞர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை. பல மாதங்களுக்கு பின்பு மனம் தளர வேண்டிய நிலை ஏற்பட்டது. நிதிஷ் குமார் அரசும் ஒரு நாள் இளைஞர்கள் முன்பு தலைகுனிந்து நிற்க வேண்டியது இருக்கும்" இவ்வாறு பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.

டிசம்பர் 13-ம் தேதி நடந்த பிபிஎஸ்சியின் 70வது ஒருங்கிணைந்த (முதன்மை) போட்டித்தேர்வினை ரத்து செய்யக்கோரி ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் வியாழக்கிழமை முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in