“மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணம் தள்ளுபடி” - கேஜ்ரிவால் வாக்குறுதி

“மீண்டும் ஆட்சிக்கு வந்தால் உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணம் தள்ளுபடி” - கேஜ்ரிவால் வாக்குறுதி
Updated on
1 min read

புதுடெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், உயர்த்தப்பட்ட குடிநீர் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் உறுதியளித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், "டெல்லியில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர். ஆயிரக்கணக்கிலும், லட்சக்கணக்கிலும் தண்ணீர் கட்டண ரசீதுகளை டெல்லி குடிநீர் வாரியம் மக்களுக்கு அனுப்பி உள்ளது. நான் சிறைக்குச் சென்ற பிறகே இது நிகழ்ந்தது. கூடுதல் கட்டணங்களை மக்கள் செலுத்த வேண்டாம். இதை நான் முன்பே சொன்னேன். எனினும், இன்று நான் ஒரு முறையான அறிவிப்பை வெளியிடுகிறேன்.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், இந்த உயர்த்தப்பட்ட கட்டணம் தள்ளுபடி செய்யப்படும். குடிநீர் கட்டண பில்களில் தவறு இருப்பதாக நினைப்பவர்கள் அவற்றை செலுத்த வேண்டியதில்லை. ஆம் ஆத்மி அரசாங்கம் மாதத்திற்கு 20,000 லிட்டர் தண்ணீரை இலவசமாக வழங்குகிறது. டெல்லி நகரத்தில் உள்ள 12 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளன" என தெரிவித்தார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலுக்குப் பிறகு தொடர்ந்து நான்காவது முறையாக மீண்டும் ஆட்சிக்கு வர ஆம் ஆத்மி கட்சி முயற்சிக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in