

புதுடெல்லி: “2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை கடந்து வெற்றி பெற்று அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று பாஜக நம்பியது. ஆனால் அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால், அரசியலமைப்புச் சட்டம் மட்டுமல்ல, ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படமும் மாறியிருக்கும்” என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் தலைமையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தொடர்பு துறை தலைவர் பவன் கெரா, “உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடாளுமன்றத்தில் டிசம்பர் 17-ஆம் தேதி அம்பேத்கர் குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்பார் என்றும், பிரதமர் மோடி தலையிடுவார் என்றும் எதிர்பார்த்தோம். ஆனால், பிரதமர் மோடி உள்துறை அமைச்சரை ஆதரித்து அம்பேத்கரை அவமதிப்பதில் பங்குதாரர் ஆனார்.
கர்நாடகாவின் பெலகாவியில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில், இந்த விவகாரம் எழுப்பப்பட்டு, நாடு முழுவதும் 'ஜெய் பாபு - ஜெய் பீம் - ஜெய் அரசியலமைப்பு' பிரச்சாரத்தை தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்தப் பிரச்சாரத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்திலும் குழுக்களை அமைத்து, அம்பேத்கரை அவமதிக்கும், அரசியலமைப்பை இழிவுபடுத்தும் வேலையை பாஜக - ஆர்எஸ்எஸ் எவ்வாறு பல பத்தாண்டுகளாக செய்து வருகிறது என்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்வோம்.
அரசியலமைப்புச் சட்டம் இந்தியாவுக்கு எதிரானது என ஆர்எஸ்எஸ் அதன் ஊதுகுழலான ஆர்கனைசர் பத்திரிகையில் நவம்பர் 30, 1949 அன்று எழுதியது. பெண்களுக்கு சம உரிமை பற்றி அம்பேத்கர் பேசியபோது, ராம்லீலா மைதானத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அம்பேத்கரின் உருவ பொம்மையை எரித்தனர். இன்று, அம்பேத்கரின் பாரம்பரியம் மட்டுமல்ல, காந்தியின் பாரம்பரியமும் தாக்கப்படுகிறது.
2024 மக்களவைத் தேர்தலில் 400 இடங்களை கடந்து அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று பாஜக நம்பியது, ஆனால் அது நடக்கவில்லை. அது நடந்திருந்தால், அரசியலமைப்புச் சட்டம் மட்டும் மாறியிருக்காது; ரூபாய் நோட்டுகளில் மகாத்மா காந்தியின் படமும் மாறியிருக்கும்.
உலகமே ஆதர்சமாக கருதும் மகாத்மா காந்தியை, இருட்டடிப்பு செய்ய ஆளும் கட்சியான பாஜக படிப்படியாக சதி செய்து வருகிறது. எனவே, அம்பேத்கர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரின் பாரம்பரியத்தை போற்ற காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இந்த நாடு அரசியலமைப்புச் சட்டத்தால் நடத்தப்படும். அரசியல் சட்டம் மற்றும் மனுஸ்மிருதி என இரண்டையும் வைத்துக்கொண்டு பாஜக அலைய முடியாது.
நாட்டில் தலித்துகள் மற்றும் பழங்குடியினருக்கு வெளிப்படையாக அநீதி இழைப்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கான சட்டங்களையும் பாஜக பலவீனப்படுத்துகிறது. அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளுக்கு பாஜக எதிரானது. பாஜக எப்போதும் அம்பேத்கரை அவமதித்து வருகிறது. இதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம்.
'ஜெய் பாபு - ஜெய் பீம் - ஜெய் அரசியலமைப்பு' பிரச்சாரத்தின் துண்டுப் பிரசுரத்தை இன்று வெளியிடுகிறோம். நாட்டின் 90% மக்களுக்கு எதிராக பாஜக எவ்வாறு சதி செய்கிறது என்பதை வரலாற்றுப் பின்னணியுடன் உண்மையை எங்களால் சொல்ல முடியும்" என தெரிவித்தார்.