“காஷ்மீர் பிரச்சினையை ஐநா சபைக்கு நேரு கொண்டு சென்றிருக்கக் கூடாது” - கரண் சிங்

கரண் சிங் | கோப்புப் படம்
கரண் சிங் | கோப்புப் படம்
Updated on
2 min read

புதுடெல்லி: காஷ்மீர் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்கு ஜவர்ஹர்லால் நேரு எடுத்துச் சென்றிருக்கக்கூடாது; அவர் செய்த சில தவறுகளில் அதுவும் ஒன்று என்று முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான கரண் சிங் தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “நான் 18 வயதில் அரசியலுக்கு வந்தேன். ஏனென்றால் என் தந்தை மிகவும் வேதனையான சூழ்நிலையில் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவாகியது. அதற்கு காரணம் ஷேக் அப்துல்லா. ஏனென்றால், ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்று ஒரு வாக்கெடுப்புக்கு நாம் ஒப்புக்கொண்டோம். நாம் ஐக்கிய நாடுகள் சபைக்குச் சென்றிருக்க வேண்டிய அவசியமில்லை. ஜவஹர்லால் நேரு காஷ்மீர் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றது ஒரு தவறு. பண்டிட் நேரு செய்த சில தவறுகளில் இதுவும் ஒன்று. மவுண்ட்பேட்டன்தான் அவரை அதற்குள் தள்ளினார் என்று நினைக்கிறேன். இந்த முடிவு நிலைமையை மேலும் சிக்கலாக்கியது.

தனது வாழ்நாள் முழுவதும் தீவிரமான டோக்ரா எதிர்ப்பு உணர்வை ஷேக் அப்துல்லா கொண்டிருந்தார். மகாராஜா ஹரி சிங்கிற்கு எதிராக ஷேக் அப்துல்லா பரப்புரை செய்தார். இறுதியாக அவர், நேருவிடம் சென்று மகாராஜா ஹரி சிங் மாநிலத்தில் இருக்கும் வரை தன்னால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று கூறினார். இதனால், என் தந்தை மாநிலத்தைவிட்டு வெளியேறினார். எனினும், 14 ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் சந்தித்துக்கொண்டபோது, ‘புலி எப்படி இருக்கிறது?’ (என் புனைப்பெயர்) என்று கேட்டார். எங்கள் உரையாடலால் அனைத்து பதற்றமும் மறைந்தது” என தெரிவித்தார்.

“ஷேக் அப்துல்லாவின் மகன் டாக்டர் ஃபரூக் அப்துல்லா தீவிர அரசியலுக்கு வந்தது பாராட்டுக்குரியது. இதன்மூலம் அவர் தனது தந்தைக்கு பெருமை சேர்த்தார். ஃபரூக்கின் மகன் உமர் அப்துல்லா, ஒரு நம்பிக்கைக்குரிய அரசியல் எதிர்காலம் கொண்ட சமநிலையுடன் இருக்கும் நபர்.” என்றும் கரண் சிங் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கரண் சிங், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் கிரீடம் என்று இந்திய அரசு கூறிய போதிலும், அது யூனியன் பிரதேசமாக தரம் தாழ்த்தப்பட்டது. எனவே இது சரிசெய்யப்பட வேண்டிய ஒன்று. இந்திய அரசு கூடிய விரைவில் முழு மாநில அந்தஸ்தை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.” என கூறினார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 ரத்து செய்த பிறகு ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கரண் சிங், “அரசியல் ரீதியான முழு ஆட்டமும் மாறிவிட்டது. பிரிவு 370 ரத்து செய்யப்படுவதற்கு முன்பு, மாநிலத்திற்கு எவ்வளவு சுயாட்சி கிடைக்க வேண்டும் என்பதுதான் முக்கிய கேள்வியாக இருந்தது. அதற்காகத்தான் போராட்டங்கள் நடந்தன. ஆனால், 370-வது பிரிவை ரத்து செய்ததன் மூலம், இப்போது சுயாட்சி பற்றிய கேள்வியே எழவில்லை. மாநில அந்தஸ்துடன் குடியுரிமைச் சட்டங்களும் ஹிமாச்சலில் உள்ளது போல் இருக்க வேண்டும். எல்லோரும் ஹிமாச்சலில் நிலம் வாங்க முடியாது. ஏனெனில், 271, 272 பிரிவுகளின் கீழ் உள்ள குடியுரிமைச் சட்டங்கள் இதனை கட்டுப்படுத்துகின்றன.” என்று அவர் கூறினார்.

ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்கள் பற்றி குறிப்பிடுகையில், “10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தல் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. 29 இந்து தொகுதிகள் பாஜகவுக்கும், பெரும்பான்மையான முஸ்லிம் தொகுதிகள் தேசிய மாநாட்டு கட்சிக்கும் சென்றது.” என கரண் சிங் குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in