குழந்தைகள் சமூக ஊடக கணக்குகளை உருவாக்க பெற்றோரின் ஒப்புதல் அவசியம்: மத்திய அரசு

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read

புதுடெல்லி: 18 வயதுக்கு கீழுள்ள குழந்தைகள் சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்க பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதல் அவசியம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அரசு நேற்று வெளியிட்ட டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்புச் சட்டம் 2023 வரைவு விதியில் இந்த முன்மொழிவை வைத்துள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், வரைவு விதிகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. அதன் மீதான கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை பொதுமக்கள் அரசின் MyGov.in.என்ற தளத்தில் பிப்ரவரி 18, 2025-க்கு முன்பாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அவை பிப்.18-க்கு பின்பு பரிசீலிக்கப்படும்.

இந்த வரைவு விதிகள் குழந்தைகள் மற்றும் குறைபாடுடைய தனிநபர்களின் தரவுகள் பாதுகாப்பு சட்டப்பூர்வமான வழிமுறைகளின் கீழ் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது. தனிப்பட்ட தரவுகளை கையாளும் பொறுப்பில் உள்ள நிறுவனங்கள் சிறார்களின் தரவுகளைக் கையாள்வதற்கு முன்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

ஒப்புதலை சரிபார்க்க சம்மபந்தப்பட்டவர்கள் அரசு வழங்கியுள்ள அடையாள அட்டைகள் அல்லது டிஜிலாக்கர் போன்ற டிஜிட்டல் அடையாள டோக்கன்களைப் பயன்படுத்த வேண்டும்.

மேலும் இந்த வரைவு விதிகள், குழந்தைகளின் தரவுகளில் கவனம் செலுத்துவதோடு, மேம்பட்ட நுகர்வோர் உரிமைகளையும் உறுதி செய்கிறது. தாங்கள் குறித்த தரவுகளை நீக்கவோ அல்லது அந்த தரவுகள் ஏன் சேரிக்கப்படுகின்றன என்ற வெளிப்படையான விளக்கங்களை சம்மந்தப்பட்ட நிறுவனத்திடமிருந்து பெறுவதற்கு நுகர்வோருக்கு அனுமதி அளிக்கிறது.

தரவு சேகரிப்பு வழிமுறைகளை கேள்வி கேட்பதற்கும் தரவு பயன்பாடு பற்றிய தெளிவான விளக்கம் பெறுவதற்கும் நுகர்வோர்களுக்கு உரிமையளிக்கிறது. வீதிமீறல்களுக்கு ரூ.250 கோடி அபராதம் விதிக்க வழிவகை செய்கிறது. இது தரவுகளை சேரிக்கும் நிறுவனங்களுக்கு கூடுதல் பொறுப்புக்கூறலை உறுதி செய்கிறது.

இந்த வரைவு விதிகள், இ-காமர்ஸ் நிறுவனங்கள், ஆன்லைன் கேமிங் வழங்குநர்கள், சமூக ஊடக இடையீட்டாளர்கள் போன்ற டிஜிட்டல் இடையீட்டாளர்கள் (intermediaries) குறித்து தெளிவாக வரையறுத்துள்ளது. அவைகளுக்கு தனித்தனியாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

வரைவு விதிகளின் படி, சமூக ஊடக தலங்கள் என்பது, தகவல்களை பகிர்தல், அவைகளை நீக்குதல் மற்றும் மாற்றியமைத்தல் போன்ற ஆன்லைன் பரிமாற்றங்களை முதன்மையாக மேற்கொள்ளும் இடையீட்டாளர்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

இந்த விதிகளுக்கு உட்படுவதை கண்காணிக்க ஒரு டிஜிட்டல் தரவு வாரியத்தை நிறுவுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அந்த அமைப்பு முழுமையான டிஜிட்டல் ஒழுங்காற்று அமைப்பாக செயல்படும்.

இந்த வாரியம் வழக்குகளை விசாரித்தல், விதிமீறல்களை விசாரிக்கும், அபராதங்களை அமல்படுத்தும், தரவு அனுமதிகளை நிர்வகிக்கும் நிறுவனங்களின் ஒப்புதல் மேலாளர்களை பதிவு செய்யும். ஒப்புதல் மேலாளர்கள் வாரியத்தில் பதிவு செய்து நிகர மதிப்பாக சுமார் ரூ.12 கோடியை பராமரிக்க வேண்டும்.

இந்த விரிவான நடவடிக்கைகள் தரவுகளை கையாளுபவர்கள் தொழில்நுட்ப மற்றும் நிறுவன பாதுகாப்பினை கடைபிடிப்பதை உறுதி செய்கிறது. குறிப்பாக குழந்தைகள் போன்ற பாதிக்கப்படும் குழந்தைகள் போன்ற குழுக்களின் விஷயங்களில்.

அதேபோல், குழந்தைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்களின் தேவையற்ற சுமைகளை தவிர்க்கும் வகையில், கல்வி நிறுவனங்கள் போன்ற குறிப்பிட்ட சூழல்களுக்கு விதிவிலக்குகளையும் வரைவு விதி உள்ளடக்கியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in