

ஒடிஸாவில் தொடர் மழை காரணமாக பல்வேறு நதிகளில் வெள்ளம் அபாய அளவை கடந்துசெல்வதால் சுமார் 17 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நிவாரணப் பணிகளுக்கான மாநில சிறப்பு ஆணையர் பி.கே.மோகபத்ரா கூறும்போது, “மாநிலத்தில் பல் வேறு ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகின்றது. பைதாரணி ஆற்றின் வெள்ளப் பெருக்கால் ஜாஜ்பூர், பாத்ரக் ஆகிய மாவட்டங்களில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஜாஜ்பூர் மாவட்டத்தில் அக்குவாபடா என்ற இடத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங் கிருந்து சுமார் 2 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப் பட்டுள்ளனர்.
ஜாஜ்பூர், பாத்ரக், கட்டாக், சம்பல்பூர், கியோன்ஜ்கார் ஆகிய 5 மாவட்டங்களில் இருந்து மொத்தம் 17 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இவர் களுக்கு உணவு வழங்குவதற்காக ஆங்காங்கே சமையல் கூடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஜாஜ்பூர், பாத்ரக் மாவட்டங்களைத் தவிர பிற இடங்களில் மழை நின்றுள்ளதால் அங்கு நிலைமை மேம்பட வாய்ப்புள்ளது.
மழை வெள்ளத்துக்கு மாநிலத்தில் இதுவரை 23 பேர் இறந்துள்ளனர். இதில் நீரில் மூழ்கியும், சுவர் இடிந்ததாலும் இறந்தவர்களே அதிகம்.
630 அடி உயரம் கொண்ட ஹிராகுட் அணையின் நீர்மட்டம் 624.25 அடியாக உள்ளது. இந் நிலையில் சத்தீஸ்கரில் மகாநதி யின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்வதால் ஹிராகுட் அணை யில் இருந்து வெளியேறும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டி யுள்ளது” என்றார்.