“எனக்காக ஒரு மாளிகையை கட்டியிருக்கலாம்; ஆனால்...” - புதிய வீடுகள் வழங்கும் விழாவில் பிரதமர் பேச்சு

“எனக்காக ஒரு மாளிகையை கட்டியிருக்கலாம்; ஆனால்...” - புதிய வீடுகள் வழங்கும் விழாவில் பிரதமர் பேச்சு
Updated on
2 min read

புதுடெல்லி: நானும் எனக்காக ஒரு அரண்மனையை கட்டியிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, எனது நாட்டு மக்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்க வேண்டும் என்பதே எனது கனவு என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் 1,675 அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு வழங்குதல், டெல்லியில் உலக வர்த்தக மையம் திறப்பு, வீர சாவர்க்கர் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "2025ம் ஆண்டு இந்தியாவின் வளர்ச்சிக்கு பல புதிய வாய்ப்புகளை கொண்டு வருகிறது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் நமது பயணம் இந்த ஆண்டு வேகமெடுக்கப் போகிறது.

இன்று இந்தியா உலகில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையின் அடையாளமாக மாறியுள்ளது. இது 2025-ல் இந்தியாவுக்கு வலுவூட்டும். சர்வதேச அளவில் இந்தியாவின் பிம்பத்தை மேலும் வலுப்படுத்தும் ஆண்டாக இது அமையும். இந்த ஆண்டு இந்தியாவை உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாற்றும் ஆண்டாக இருக்கும். புதிய தொடக்கங்கள் மற்றும் தொழில்முனைவுகளில் இளைஞர்களை ஊக்குவிக்கும் ஆண்டாக இது இருக்கும். விவசாயத் துறையில் இந்த ஆண்டு புதிய சாதனை படைக்கும். பெண்கள் தலைமையிலான மேம்பாடு என்ற நமது மந்திரத்திற்கு புதிய உயரங்களை கொடுக்கும் ஆண்டாக இது அமையும். வாழ்க்கை வசதி மற்றும் வாழ்க்கைத் தரத்தை அதிகரிக்கும் ஆண்டாக இது அமையும்.

வளர்ச்சி அடைந்த இந்தியாவை கட்டி எழுப்புவதில் இன்று முழு தேசமும் ஒன்றுபட்டுள்ளது. ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு கான்கிரீட் வீடு இருப்பதை உறுதி செய்வதே எங்கள் நோக்கம். இந்த இலக்கை அடைய நாங்கள் அயராது உழைத்து வருகிறோம். இந்த தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் டெல்லி கணிசமான பங்கை வகிக்கிறது. அதனால்தான் பாஜக-வின் மத்திய அரசு, குடிசைப் பகுதிகளுக்குப் பதிலாக நிரந்தர வீடுகளைக் கட்டும் முயற்சியைத் தொடங்கியுள்ளது.

இந்த வீடுகளின் உரிமையாளர்கள் டெல்லியின் பல்வேறு இடங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம், ஆனால் அவர்கள் அனைவரும் எனது குடும்ப உறுப்பினர்கள். மோடி தனக்கென ஒரு வீட்டைக் கட்டியதில்லை. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமான மக்களின் கனவுகளை நிறைவேற்றியிருக்கிறார் என்பது நாட்டுக்கே நன்றாகத் தெரியும்.

நானும் ஒரு கண்ணாடி மாளிகையை கட்டியிருக்கலாம். ஆனால் என்னைப் பொறுத்தவரை, எனது நாட்டு மக்களுக்கு நிரந்தர வீடுகள் கிடைக்க வேண்டும் என்பதே எனது கனவு. புதிய வீடுகளை பெறும் பயனாளிகளான நீங்கள் குடிசைவாசிகளை சந்திக்கும் போதெல்லாம், இன்று இல்லாவிட்டால் நாளை நிச்சயம் கான்கிரீட் வீடுகள் கிடைக்கும் என்பதை என் சார்பாக உறுதியாக தெரிவிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.

வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் நமது நகரங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. மக்கள் தொலைதூரத்தில் இருந்து கனவுகளுடன் வந்து, அந்த கனவுகளை நிறைவேற்றுவதில் மிகுந்த நேர்மையுடன் தங்கள் வாழ்க்கையை செலவிடுகிறார்கள். எனவே, நகரங்களில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தரமான வாழ்க்கை வழங்குவதில் மத்திய பாஜக அரசு மும்முரமாக உள்ளது.

டெல்லி கடந்த 10 ஆண்டுகளாக பெரும் பேரழிவால் சூழப்பட்டுள்ளது. அன்னா ஹசாரேவை முன்வைத்து வந்த சில நேர்மையற்றவர்கள், டெல்லியின் எளிய மக்களை பெரும் பேரழிவுக்குள் தள்ளினார்கள். மதுக்கடைகளில் ஊழல், பள்ளிகளில் ஊழல், ஆள்சேர்ப்பு என்ற பெயரில் ஊழல் என ஊழல் புரிந்தவர்கள் இவர்கள். டெல்லியின் வளர்ச்சியைப் பற்றி இவர்கள் பேசுவார்கள், ஆனால் இவர்கள் டெல்லியின் வளர்ச்சி மீது கடுமையான தாக்குதலை தொடுத்தவர்கள்.

ஆம் ஆத்மிக்கு எதிராக டெல்லி மக்கள் போர் தொடுத்துள்ளனர். டெல்லி வாக்காளர்கள் டெல்லியை ஆம் ஆத்மி கட்சியின் பிடியில் இருந்து விடுவிப்பதில் உறுதியாக உள்ளனர். ஏனெனில், ஆம் ஆத்மி கட்சி ஒரு பேரழிவு போல டெல்லியை தாக்கி உள்ளது. இவர்கள் வெளிப்படையாக ஊழலில் ஈடுபட்டு அதை கொண்டாடுகிறார்கள்.

டெல்லி மக்களுக்கு இலவச சிகிச்சை வசதி வழங்கும் 'ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் பலன்களை வழங்க விரும்புகிறேன். ஆயுஷ்மான் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தை இங்கு (டெல்லி) செயல்படுத்த ஆம் ஆத்மி அரசு அனுமதிக்கவில்லை. இதனால் டெல்லி மக்கள் கஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.” என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in