பிரதமர் மோடி, அமித் ஷா அழுத்தம் தரவில்லை: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவிப்பு

பிரதமர் மோடி, அமித் ஷா அழுத்தம் தரவில்லை: ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவிப்பு
Updated on
1 min read

ஸ்ரீநகர்: பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடமிருந்து எங்களுக்கு எந்த அழுத்தமும் இல்லை என்று ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அறிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மாநில அந்தஸ்தில் இருந்த ஜம்மு-காஷ்மீர் கடந்த 2019-ம் ஆண்டு இரண்டாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. இதை ஒரு தற்காலிக ஏற்பாடாக மட்டுமே நாம் பார்க்கவேண்டும். விரைவில் ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை பெறுவதே நமது அரசுக்கு உள்ள மிகப்பெரிய சவால்.

மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசிடமிருந்து ஜம்மு-காஷ்மீருக்கு அழுத்தம் இருப்பதாக வரும் செய்திகள் அனைத்தும் பொய்தான். பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்தோ, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமிருந்தோ அல்லது துணை நிலை ஆளுநர் மாளிகையில் இருந்தோ எங்களுக்கு எந்த அழுத்தமும் வரவில்லை.

ஜம்மு-காஷ்மீர் ஆளும் தேசிய மாநாட்டு கட்சி அரசு நிலையாக தொடர போதுமான ஒத்துழைப்பை பிரதமரும், உள்துறை அமைச்சரும் தருவதாக எனக்கு உறுதி அளித்துள்ளனர்.

என்னுடைய கொள்கையை நான் மாற்றிக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) சேர்வேன் என்று பொய்யான செய்திகள் உலாக வருகின்றன. அதை யாரும் நம்ப வேண்டாம். அப்படிப்பட்ட செய்திகள் வெளியானால் அதற்கு நான் பொறுப்பல்ல.

நான் இங்கு மக்கள் பணியாற்ற வந்துள்ளேன். அதை தொடர்ந்து செய்வேன். மாநில அந்தஸ்தை பெறுவதற்காக நீதிமன்ற படியேறுவீர்களா என்று நீங்கள் (பத்திரிகையாளர்கள்) கேட்கிறீர்கள். நீதிமன்றத்துக்குச் சென்று வழக்கு தொடர்ந்தால் அது வெறும் சண்டையாகத்தான் இருக்கும். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என்பது எங்களுக்கான கடைசி வாய்ப்பாக இருக்கும்.

மாநில அந்தஸ்து: இதுதொடர்பாக பிரதமரோ, மத்திய உள்துறை அமைச்சரோ, உச்ச நீதிமன்றமோ பேசவில்லையென்றால் நீதிமன்றம் செல்லலாம்.

ஆனால், மாநில அந்தஸ்தை தருவதாக அவர்கள் உறுதிமொழி அளித்துள்ளனர். எனவே, அவர்களுக்கு முதலில் வாய்ப்பை வழங்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in