

மேற்கு வங்கத்தின் மால்டா மாவட்டத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலர் துலால் சர்க்கார் நேற்று அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேற்கு வங்க மாநிலம், மால்டாவை சேர்ந்த திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலர், பாப்லா என்கிற துலால் சர்க்கார். இவர் நேற்று காலை மால்டாவின் ஜல்ஜலியா மோரே பகுதியில் இருந்தபோது, மோட்டார் பைக்கில் வந்த 3 பேர் மிக அருகிலிருந்து துப்பாக்கியால் பலமுறை சுட்டுவிட்டு தப்பிவிட்டனர். பட்டப்பகலில் மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
படுகாயம் அடைந்த துலால் சர்க்கார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து முதல்வர் மம்தா பானர்ஜி தனது 'எக்ஸ்' பதிவில், “நடந்த சம்பவம் பற்றி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். திரிணமூல் காங்கிரஸின் தொடக்கத்தில் இருந்தே பாப்லாவும் அவரது மனைவி சைதாலியும் கட்சிக்காக கடுமையாக உழைத்தனர். கவுன்சிலராக பாப்லா தேர்ந்தெடுக்கப்பட்டார். சைதாலி தொடர்ந்து போரிடுவதற்கான வலிமையை அவருக்கு கடவுள் அளிக்கட்டும்" என்று கூறியுள்ளார்.