

புதுடெல்லி: நாட்டின் ஜனநாயகத்தை பாஜக பலவீனப்படுத்துகிறதென ஆர்எஸ்எஸ் நினைக்கிறதா என்று கேள்வி எழுப்பி, அவ்வமைப்பின் தலைவருக்கு டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் புதன்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் தலைவர் மோகன் பகவத்-க்கு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவால், பாஜகவின் நவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பி இன்று கடிதம் எழுதியுள்ளர். அக்கடிதத்தில் கேஜ்ரிவால், "கடந்த காலங்களில் பாஜக செய்த தவறுகளை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா? பாஜக தலைவர்கள் வெளிப்படையாக பணம் விநியோகம் செய்கிறார்கள். வாக்குகளுக்கு பணம் கொடுப்பதை ஆர்எஸ்எஸ் ஆதரிக்கிறதா? தலித்துகள் மற்றும் பூர்வகுடிகள் வாக்குகள் பெருமளவில் நீக்கப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கை ஜனநாயகத்துக்கு சரியானது என்று ஆர்எஸ்எஸ் நினைக்கிறதா? பாஜக ஐனநாயகத்தை பலவீனப்படுத்துகிறது என்று எண்ணுகிறதா?" என்று தனது கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா காக்கர், பாஜக டெல்லியில் குறிப்பாக ஷாதரா பகுதியில் பாஜக வாக்காளர்கள் பட்டியலில் மாற்றம் மேற்கொள்வதாக திங்கள்கிழமை குற்றம்சாட்டியிருந்தார். அவர் கூறுகையில், "டெல்லியில் வசிக்கும் பல பூர்வகுடிகளின் வாக்குகளை நீக்க பாஜக விரும்புகிறது. பாஜகவைச் சேர்ந்த விஷால் பரத்வாஜ், ஷாரதா தொகுதியில் வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்காக விண்ணப்பித்துள்ளார். அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. புதுடெல்லி தொகுதியில் பாஜகவைச் சேர்ந்த பரவேஸ் சர்மா, வாக்காளர்களுக்கு பணம் விநியோகித்தார். பாஜக தலைவர் ஒருவர் வாக்காளக்களின் பெயர்களை நீக்க தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளார். மற்றொரு விண்ணப்பம் வாக்களார்களின் பெயர்களை சேர்க்க கொடுக்கப்பட்டுள்ளது." என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே, பாஜக வாக்காளர்கள் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்கிறது என்று கேஜ்ரிவால் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியிருந்தார். வரைவு வாக்காளர்கள் பட்டியல் தொடர்பான அனைத்து திருத்தங்களும் டிசம்பர் 24ம் தேதிக்குள் மேற்கொள்ளப்பட்டுவிட்டது; இறுதி வாக்காளர்கள் பட்டியல் 2026, ஜன,6ம் தேதி வெளியிடப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. நெருங்கி வரும் டெல்லி பேரவைத் தேர்தலை முன்னிட்டு பாஜக, ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையேயான மோதல் போக்கு தீவிரமடைந்துள்ளது. இரு கட்சிகளும் ஒருவர் மீது மற்றவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.