

மும்பை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளி ஒருவருக்கு தூய்மை பணியாளர்கள் இசிஜி எடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இசிஜி, எக்ஸ்ரே எடுப்பவர்கள் அதற்காக முறையாக படித்து பயிற்சி பெற்ற மருத்துவ நிபுணர்களே மேற்கொள்ள வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான கோவண்டியில் பிஎம்சி நடத்தி வரும் சாதாப்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு சீருடை அணிந்த தூய்மைப் பணியாளர்கள் இசிஜி எடுத்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் டிசம்பர் 28-ம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சதாப்தி மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் கூறுகையில், “ புதிதாக ஆட்சேர்ப்பு எதுவும் நடைபெறவில்லை. இசிஜி டெக்னீஷியன்களை பணியமர்த்துமாறு பிஎம்சி-யிடம் பலமுறை முறையிட்டு விட்டோம். ஆனால், அதற்கு இதுவரை பலன் எதுவும் இல்லை. தொழில்நுட்பம் போதுமான அளவு முன்னேறியுள்ளது. எனவே, சிறிய பயிற்சியுடன் எவரும் அதனை பயன்படுத்த முடியும். எங்களிடம் உள்ள மனித வளங்களைக் கொண்டு முடிந்த வரையில் சிறப்பாக வேலை செய்கிறோம். அனைத்து பிரிவுகளிலும் 35 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன" என்கின்றனர்.