

இந்திய கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களை மேம்படுத்த ரூ.2,867 கோடி மதிப்பில் இரு ஒப்பந்தங்களை பாதுகாப்புத்துறை அமைச்சகம் செய்துள்ளது.
கடற்படையில் உள்ள நீர் மூழ்கி கப்பல்களில், உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம்(டிஆர்டிஓ) உருவாக்கிய ஏர் இன்டிபென்டன்ட் புரொபல்ஷன் (ஏஐபி) இயந்திரத்தை பொருத்தவும், கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களில் எலக்ட்ரானிக் ஹெவி வெயிட் டார்பிடோவை (இஎச்டபிள்யூடி) இணைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
ஏஐபி இயந்திரத்தை பொருத்த மும்பை மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்துடன் 1,9990 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடற்படை நீர்மூழ்கி கப்பல்களில் ஏஐபி இயந்திரத்தை பொருத்துவதற்கான மாற்றங்கள் செய்யப்படும். ஏஐபி தொழில்நுட்பம் நீர்மூழ்கி கப்பல்களில் பொருத்துவதன் மூலம், அவை கடலுக்கடியில் நீண்ட காலம் இருக்க முடியும். வழக்கமாக டீசல் இன்ஜின் நீர்மூழ்கி கப்பல்களுக்கு தேவையான காற்றை ஸ்னார்கெல் என்ற பைப் மூலம் பெற நீர்மூழ்கி கப்பல்கள் குறிப்பிட்ட தூரம் கடலில் மேற்பகுதிக்கு வரும். ஏஐபி பொருத்துவதன் மூலம், நீர்மூழ்கி கப்பல்கள் கடலின் மேற்பரப்புக்கு வரத் தேவையில்லை.
எலக்ட்ரானிக் டார்பிடோ: கல்வாரி ரக நீர்மூழ்கி கப்பல்களில் நவீன எலக்ட்ரானிக் ஹெவி வெயிட் டார்பிடோ (இஎச்டபிள்யூடி) பொருத்த பிரான்ஸ் நாட்டின் நேவல் குரூப்புடன் ரூ.877 கோடி மதிப்பில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நவீன் டார்பிடோ ஏவுகணையில் அலுமினியம் சில்வர் ஆக்சைடு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் டார்பிடோ நீண்ட தூரம், அதிவேகத்தில் சென்று எதிரியின் இலக்கை தகர்க்கும். மேலும், இந்த டார்பிடோ நீர்மூழ்கிகப்பல்களில் இருக்கும் போது எந்த சூழ்நிலையிலும் வெடிக்காது. நீர்மூழ்கி கப்பலில் தீ விபத்து ஏற்பட்டால் கூட வெடிக்காத வகையில் இந்த இச்டபிள்யூடி தயாரிக்கப்படுகிறது. இந்த டார்பிடோ பிரான்ஸ் தொழில்நுட்பத்தில் இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நீர்மூழ்கி கப்பல்களின் மேம்பாட்டுக்காக பாதுகாப்புத்துறை அமைச்சகம் மேற்கொண்ட 2 ஒப்பந்தங்களும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது.